Monday, August 29, 2011

ஹிந்தி

இந்தி தெரியாததால் ஏற்பட்ட இழப்புகள்

நான் பள்ளியில் படித்தபோது ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி படித்தேன். பின்பு, அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் காரணமாக, பள்ளிகளில் இந்தி கற்பிப்பது நிறுத்தப்பட்டது. அரசின் கொள்கை முடிவால், இதை ஒரு பெரிய வெற்றியாக அன்று நினைத்தாலும், பிற்காலத்தில் அலுவல் காரணமாக மற்றும் சிறப்பு பயிற்சிகள் பெற வேண்டி, வட மாநிலங்களுக்கு செல்லும்போதுதான் இந்தியை கற்காததால், பல சங்கடங்களை சந்திக்க வேண்டி வந்தது. தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலத்தவரும் இந்தி பேச தெரிந்திருப்பதால், அவர்களால் வட மாநிலங்களில் சுலபமாக சென்று வர முடிகிறது. இந்தி தெரியாத காரணத்தால் பல தமிழக இளைஞர்கள் திறமை இருந்தும், சென்னை சென்ட்ரல் தாண்ட முடியாமல், தமிழகத்துக்குள்ளேயே உழன்று வருகின்றனர். பல பெரிய பதவிகளையும் பெற முடியாமல் வாய்ப்பை இழக்கிறார்கள். இந்தி தெரியாமல் நான் அவதிப்பட்ட சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

1980-இல் ஒரு பயிற்சிக்காக நான் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தது. அதுவே எனது முதல் வட இந்திய பயணம். சென்னையில் இருந்து டெல்லி சென்று, இரவு ஒன்பது மணிக்கு பழைய டெல்லியிலிருந்து கிளம்பும் புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்ய வேண்டும். என்னைவழியனுப்ப, டெல்லியில் பணிபுரிந்த எனது மாமன் மகன் வந்து இருந்தார். வண்டியில்ஒட்டபட்டிருந்த ரிசர்வேஷன் சார்ட் இந்தியில் கையால் எழுதி ஒட்டபட்டிருந்தது. இந்தி தெரிந்த எனது அத்தான் உடன் இருந்ததால், அவர் உதவியுடன் எனது பெட்டி மற்றும் இருக்கை எண்களை கண்டறிந்து, முதல் வகுப்பு பெட்டிக்கு சென்றோம். எனது இடத்தில வேறு ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். நான் ஆங்கிலத்தில் எழுந்திருக்குமாறு கூறியும், அவர் காதில் வாங்காதவர் போல, உட்கார்ந்திருந்தார். பிளாட்பாரத்தில் நின்றிருந்த எனது அத்தானை உதவிக்கு அழைத்தேன். பெட்டிக்குள் வந்து, இந்தியில் அந்த நபரை எழுந்திருக்குமாறு கூறினார். அதற்கு அவர், டி.டி. ஆர். தான் இங்கே உட்கார சொன்னார் என்று கூறினார். உடனே, டி.டி. ஆரை பார்த்து, என் இடத்தில் எவ்வாறு வேறு ஒருவரை உட்கார வைத்தீர்கள் என்று கேட்டபோது, நீங்கள் இடத்தை கண்டுபிடித்து வந்துவிட்டீர்களா? வரமாட்டீர்கள் என்று எண்ணித்தான் அவரை உட்கார சொன்னேன் என்று கூறி, அவரை எழுந்து வேறு இடத்துக்கு செல்லுமாறு கூறினார். உடனே, எனது அத்தான் இந்தியில் பெயர் சார்ட் இருப்பதால், தமிழ் பெயர் கொண்ட உன்னால் இடத்தை சரியாகப் பார்த்து உட்கார முடியாது என எண்ணி, வேறு ஒருவரை டி.டி. ஆர். உட்கார வைத்துள்ளார். நான், உன்னுடன் வராதிருந்தால், உன் பாடு திண்டாட்டம்தான். இந்த வண்டி இரவு நான்கு மணிக்கு லூதியானா செல்லும். டி.டி. ஆர். அல்லது கோச் அட்டண்டன்ட் யாரும் உன்னை எழுப்ப மாட்டார்கள். நீயே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ளவும் என்று கூறி சென்றார்.

அவர் கூறியது போலவே, வழியில் வண்டி நிற்கும்போது, என்ன ஸ்டேஷன் என்று ஆங்கிலத்தில் கேட்டால், யாரும் பதில் சொல்லவில்லை. முதல் வகுப்பில் பயணம் செய்தாலும், இரவு முழுவதும் தூங்காமலேயே பயணம் செய்தேன். நான்கு மணிக்கு புகைவண்டி லூதியானா சென்றது. அங்கு வண்டி சுமார் அரை மணி நேரம் நின்றதால், எனது பெட்டியிலிருந்து இறங்கினேன். எனது புகை வண்டி மூன்றாவது நடைமேடையில் நின்றிந்தது. அப்போது, ஜம்முவிலிருந்து வந்த புகைவண்டி இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. வானம் இருண்டு, சிறுசிறு மழை துளிகள் விழ ஆரம்பித்தது. ஒரு போர்ட்டரை அழைத்து எனது பெட்டியை எடுத்து வருமாறு கூறி நடக்கத் துவங்கினேன். திடீரென்று, நல்ல கன மழை ஆரம்பித்தது. அதற்குள், மேம்பாலத்தில் ஏறி விட்டதால் நனையாமல் தப்பித்தேன்.

புகைவண்டி நிலையத்தின் வெளி பகுதிக்கு வந்தேன். வேளாண்பல்கலை கழகத்திலிருந்து என்னை அழைத்து செல்ல வண்டி அனுப்புவதாக கூறியிருந்தார்கள். ஆனால் யாரும் வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு, ஒரு ஆட்டோவை அழைத்து வந்தார். அந்த ஆட்டோ டிரைவர் இந்தியில் ஏதோ கூறினார். போர்ட்டர் இந்தியிலும், பஞ்சாபியிலும் ஏதோ கூறி, பெட்டியை தூக்கினார். எனக்கு, எதுவும் புரியவில்லை. பெட்டியை போர்ட்டர் எடுத்து செல்லாமல், கெட்டியாக பிடித்துகொண்டேன். அப்போது, இந்த நிகழ்வை பார்த்துக்கொண்டு நின்ற ஒரு பயணி என் அருகில் வந்து, 'நீங்கள் ஞானப்பிரகாசம் தானே' என்று ஆங்கிலத்தில் கேட்டார். எனக்கு தூக்கிவாரி போட்டது. இந்த விடியற்காலை நேரத்தில், முதன்முதலாக வட இந்தியா வந்துள்ள நம்மை, பெயர் சொல்லி ஒருவர் அழைக்கிறாரே? என்று ஆச்சர்யத்துடன், 'ஆம்' என்றேன்.

உடனே அவர், ' பல்கலைக் கழகத்தில், தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக, மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை முன் நுழைவாயில் பூட்டப்பட்டு, போலீஸ் காவல் போடப்பட்டுள்ளதால், எந்த வண்டியும் பல்கலைகழகத்துக்குள் செல்ல அனுமதி இல்லை. பயணிகள் தங்கும் அறையில் காத்திருங்கள். காலை ஆறு மணிக்கு வந்து அழைத்து செல்கிறேன் என்று ஆட்டோ ஓட்டுனர் கூறுகிறார்' என்று எனக்கு ஆங்கிலத்தில் அந்த பயணி ஆட்டோ டிரைவரின் இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறி, என்னை முதல் வகுப்பு பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.பின்னர், நீங்கள் யார்? என்னை எப்படித் தெரியும்? என்று அவரிடம் கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே, நான் காஷ்மீர் அரசில் வேலை செய்கிறேன். நீங்கள் சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது, நான் முதலாம் ஆண்டு படித்தேன். காஷ்மீர் மாநில கோட்டாவில் உங்கள் வகுப்பு மற்றும் அறைத் தோழர் ஹிரால் குருட்டுவை பார்ப்பதற்காக, முதலாம் ஆண்டு மாணவனான நான் உங்கள் அறைக்கு பல முறை வந்துள்ளேன். நீங்கள் என்னை மறந்து இருக்கலாம். ஆனால் எனக்கு உங்களை நன்றாக நினைவுள்ளது.

நானும் இப்போதுதான் ஜம்முவிலிருந்து வரும் புகைவண்டியில் இருந்து இரண்டாம் நடைமேடையில் இறங்கி வரும்போதே, மூன்றாம் நடைமேடையில் நீங்கள் நிற்பதைப் பார்த்தேன். உங்களை நான் அங்கு எதிர்பார்க்கவில்லை. சுமார் இருபத்தோரு ஆண்டுகளுக்குப்பின் உங்களை பார்த்ததால், உடனடியாக, உங்களை அணுகி பேச தயங்கினேன். நீங்கல்தான என்று உறுதி செய்வது எப்படி என்று யோசித்துக் கொண்டே உங்கள் பின்னால் வந்தேன். நீங்கள் ஆட்டோ டிரைவர் மற்றும் போர்ட்டர் ஆகியோருடன் இந்தியில் பேச முடியாமல் தவிப்பதைப் பார்த்தவுடன், நீங்கள்தான் என்று முடிவு செய்தேன் என்று கூறினார். தானும், தனது பி.ஹெச்டி ஆராய்ச்சி தொடர்பான சில தகவல்களை பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் இருந்து திரட்ட, ஜம்முவிலிருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மகிழ்வுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டே காத்திருந்தோம். காலை ஆறு மணிக்கு பல்கலைகழகத்தில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட ஜீப்பில் இருவரும் ஒன்றாக பல்கலைகழகத்துக்கு சென்றோம்.

இதுபோல, பின்னாளில் அலுவல் காரணமாக பலமுறை வட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்ற போதெல்லாம், இந்தி தெரியாததால் நிறைய கஷ்டபட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும், வெளியே செல்லும்போதும், ஆங்கிலமும், ஹிந்தியும் தெரிந்த ஒருவரை உடன் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

நான் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவி முடிந்தவுடன், சில வட மாநில பல்கலைகழகங்களின் துணைவேந்தர் பதவி என்னைத் தேடி வந்த போதும் மற்றும் டெல்லியிலுள்ள மத்திய அரசின் சில உயர் பதவிகள் தேடி வந்தபோதும், இந்தி தெரியாத காரணத்தால், வேண்டாமென்று மறுத்துவிட்டேன்.

குறிப்பாக மனைவிக்கு இந்தி தெரியாததால், முதியவர்களான நாங்கள் இனி இந்தி பேச கற்றுகொள்வது இயலாத காரியம் என்பதால், பல நல்ல வாய்ப்புகளை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது நல்லது. அதுவும், நம் நாட்டில் சுமார் ஐம்பது கோடி பேருக்கும் மேல் பேசும் ஒரு மொழியை கற்றுகொள்வது மிகவும் நல்லது. இரண்டு மொழி தெரிந்தவன் இரண்டு பேருக்கு சமம் என்று சொல்லுவார்கள். இந்தி திணிப்பை மறுப்பதே தனது கொள்கையென்று அரசு இந்தி போதிக்கா விட்டாலும், இளைஞர்கள், தனிப்பட்ட முறையிலாவது இந்தி படித்து, பேசக் கற்று கொள்வது, அவர்களுடைய எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது என்பது என் கருத்து.

No comments:

Post a Comment