Thursday, July 1, 2010

தினமலரின் தவறான தகவல்

27.06.2010 தினமலரில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பெயர் பலகை இன்னமும் "Madras Veterinary College” என்றே உள்ளது என்பதே அது. அத்துடன் கூடவே ஒரு புகைப்படமும் வெளியாகி உள்ளது.

இந்த செய்தியை பத்திரிகைக்கு தந்த நிருபர் ஒன்று பத்திரிகை தர்மம் என்பதை குழிதோண்டி புதைக்கும் நோக்குடையவராக இருக்கவேண்டும். அல்லது வேறு எதோ உள்நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.

காரணம், கல்லூரியில் நுழைபவர் அனைவருக்கும் முதலில் கண்ணில் படும் வகையில் "சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி" என்று அழகிய தமிழில் வைக்கப்பட்டுள்ள பெரிய பெயர் பலகையை வேண்டுமென்றே மறைத்து, இரண்டாவதாக ஆங்கிலத்தில் வைத்துள்ள பெயர்பலகையை மட்டும் பெரிதாக புகைப்படம் எடுத்து செய்தி கொடுத்திருக்கிறார்.
முழுமையான படம்




ஒரு செய்தி உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிப் பவருக்குதான் நிருபர் என்று பெயர். வேண்டுமென்றே உண்மையை மறைக்கும் நிருபரை என்னவென்று அழைப்பது?

அது மட்டுமல்ல. வேப்பேரி நெடுஞ்சாலையில் கல்லூரியின் நுழை வாயிலில் வைத்துள்ள பெயர் பலகையில் கல்லூரியின் பெயர் முதலில் தமிழிலும், அதன் கீழே இரண்டாவதாகத்தான் ஆங்கிலத்தில் உள்ளது. இந்த பெயர் பலகையையும் வேண்டுமென்றே மறைத்திருக்கிறார் நிருபர்.

"மெட்ராஸ் சென்னையாக மாறி பல ஆண்டுகள் ஆனது. ஆனால் கால்நடை மருத்துவக்கல்லூரியின் பெயர் பலகை இன்னமும் ஆங்கிலத்தில்தான் உள்ளது" என்று கூறியுள்ளார் நிருபர்.

இது, நிருபருக்கு போதுமான அளவு அறிவாற்றலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

மெட்ராஸ் சென்னை ஆகிவிட்டது. ஆனால், சென்னை பல்கலைகழகம் ஆங்கிலத்தில் இன்னமும் University of Madras என்றே அழைக்கப்படுகிறது. சென்னை மருத்துவக்கல்லூரி இன்னமும் Madras Medical College என்றே அழைக்கப்படுகிறது. காரணம், இந்த பெயர்களில் இக்கல்லூரிகள் உலக அளவில் பிரபலமாகிவிட்டன. மேலும் தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த கல்லூரிகளை இந்த பெயரிலேயே அங்கீகரித்துள்ளன. ஆகவே, இந்த பெயரை மாற்றினால், கல்லூரியின் அங்கீகாரம் தொடர்பாக நிர்வாக ரீதியாகவும் பல பிரச்சினைகள் எழும். இது போன்ற நியாயமான காரணங்க ளால்தான் ஆங்கிலத்தில் எழுதும்போது இது போன்று எழுதுவதை அரசு அனுமதித்துள்ளது.


சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த வர்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவியர் படிக்கின்றனர். சமீப காலமாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற மேரிலான்ட், மிச்சிகன், நெப்ரஸ்கா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவ மாணவியரை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு பயிற்சிக்காக அனுப்பு கின்றன. மலேசியா புத்ர பல்கலைகழகம், பங்களாதேசிலுள்ள சிட்டகாங் பல்கலைக்கழகம் போன்றவை கூட தங்கள் மாணவர்களை இங்கு பயிற்சிக்காக அனுப்புகின்றன. இந்நிலையில் தமிழ் தெரியாத அவர்கள் புரிந்துகொள்ள ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற காரணங்களால்தான் ஆங்கிலத்திலும் பெயர்ப் பலகை வைத்துள்ளார்கள்.

மேற்கண்ட உண்மைகள் எதுவும் தெரியாமலோ அல்லது தெரிந்தும், வேறு ஏதோ உள்நோக்கமுடனோ, பத்திரிகை சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி, இதுபோன்று மக்களை திசை திருப்பும் செய்தியை இந்நிருபர் எழுதியுள்ளார்.

நிருபர்தான் இதுபோன்று ஒரு செய்தியை தருகிறார் என்றால் பாரம்பரியம் மிக்க தினமலர் நாளேடு இச்செய்தி பற்றி விசாரிக்காமல் எப்படி வெளியிட்டது என்று தெரியவில்லை.
இந்நிலையில் திடீரென 28.06.2010 தினமலரில் மீண்டும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர் பலகைகளை வெளியிட்டு, மீண்டும் மெட்ராஸ் என்பதை சென்னை என்று எப்போது மாற்றுவார்களோ? என்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.


நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க, உலகப்புகழ் பெற்ற சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியின் பெயர் பலகை பற்றி தேவையில்லாத, உண்மைக்கு புறம்பான தகவலுடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ள தினமலரின் செய்கை, தினமலரின் நெடுநாள் வாசகனான எனக்கு மிகவும் மனவேதனை அளிக்கிறது.

ஒரு தகவல் உண்மையா என்பதை அறிந்துகொள்ள பத்திரிகையில் அது குறித்து வந்துள்ளதா என்று பார்ப்பது வழக்கம். ஆனால் பத்திரிகைகளே இதுபோன்று தவறான, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டால், அதன் நம்பகத் தன்மை குறைந்துவிடாதா?

பத்திரிகைகள் மக்களிடம் உள்ள செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள, நிருபர்கள் தரும் செய்திகளை அப்படியே வெளியிடாமல், உரிய முறையில் விசாரித்து, உண்மையை வெளியிட வேண்டும்.

பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடவென்றே சில பத்திரிகைகள் உள்ளன. தினமலர் போன்ற பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இதுபோன்ற வேலைகளை செய்யவேண்டுமா?