Monday, March 29, 2010

ஓட்டச்சிவிங்கியின் இரத்த அழுத்தம்

சுமார் 50 வருடங்களுக்கு முன், இரத்த அழுத்த நோய் பற்றி சாதாரண மக்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். அனால் இன்று அதிகம் படிப்பறிவு இல்லாத கிராம மக்கள் கூட, இரத்த அழுத்த நோய் பற்றி ஓரளவு தெரிந்து வைத்துள்ளார்கள். மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கு வரும் இரத்த அழுத்த மாற்றத்தால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள, இயற்கை அவைகளுக்கு அளித்துள்ள கொடை (Natures’ Gift) மருத்துவம் படித்தவர்களுக்குக்கூட இன்றுவரை தெரியாது.

இப்பூவுலகில் வாழும் இரண்டாவது மிகப்பெரிய மிருகமான ஒட்டச்சிவிங்கியின் இரத்த அழுத்த மாற்ற வினோதங்கள் பற்றி அறிந்த கால்நடை மருத்துவர்கள் கூட சிலர் மட்டுமே.



டார்வினின் பரிணாம வளர்ச்சி (Darwin’s Theory on Evolution) தத்துவப்படி, மர உச்சியிலுள்ள தழைகளையும், இலைக்கொழுந்து களையும் தின்பதற்கு, வசதியாக நீண்ட கழுத்தை ஒட்டச்சிவிங்கிக்கு இயற்கை அளித்திருந்தாலும், அதன் கழுத்து முள்ளெலும்பு (Cervical Vertebra) மனிதனுக்கு உள்ளது போல ஏழு மட்டுமே. ஒவ்வொரு கழுத்து முள் எலும்பும் 11” நீளமுடையவை ஆகும். இதனால், ஒட்டச்சிவிங்கிகளின் மூளை, அதன் இதயத்தில் இருந்து சுமார் 2 மீட்டர் தூரத்திற்கு அப்பால் (8 - 10 அடி) அமைந்துள்ளது. இதுபோலவே, மனிதனுக்கு அமைந்திருந்தால், மூளைக்கு போதுமான இரத்த ஓட்டமின்றி, அவனுக்கு தலைவலி வந்துவிடும். அனால், ஒட்டச்சிவிங்கிக்கு எந்த நோயுமில்லையே? ஏன்? இயற்கை அன்னை அளித்துள்ள சிறப்பு உடற்கூறு என்ன?

ஒரு மனிதனுடைய சராசரி இரத்த அழுத்தம் 120/70 என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒட்டச்சிவிங்கியின் இரத்த அழுத்தம் எவ்வளவு தெரியுமா? 300/200௦௦. உலகிலுள்ள எல்லா விலங்குகளையும் விட அதிக இரத்த அழுத்தம் ஒட்டசிவிங்கிக்கு மட்டும்தான். உலகின் மிகப்பெரிய விலங்கான யானைக்குக் கூட 178/118 தான் இரத்த அழுத்தம். இவ்வளவு அதிகமான இரத்த அழுத்தம் இருப்பதால்தான், ஒட்டச்சிவிங்கியின் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்கிறது. அதிக இரத்த அழுத்தம் மூளைக்கு நன்மை செய்தாலும், இதயத்தின் கீழ் பகுதியான கால்களுக்கு தீமை செய்யும் வாய்ப்புள்ளது. ஏன்? சில சமயங்களில் மூளைக்குமே தீங்கு நேர வாய்ப்புள்ளது.

முதலில் அதிக இரத்த அழுத்தம் ஒட்டச்சிவிங்கிகளுக்கு எவ்வாறு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு மனிதனின் இதயம் இரத்தத்தை பீய்ச்சி (pumping) வெளியேற்றுவது போல, ஒரு ஒட்டச்சிவிங்கியின் இதயம் இயங்கினால், போதுமான இரத்த அழுத்தமின்றி மூளைக்கு தேவையான இரத்த அழுத்தமும், பிராண வாயுவும் போய் சேராது. ஆகையால், அதிகமான இரத்த அழுத்தம் தரக்கூடிய தன்மையுள்ள இதயம் தேவை. அவ்வளவு அதிக திறன் கொண்ட 2 அடி நீளமும், 3” இன்ச் தடிமனுள்ள 10௦ கிலோ எடையுள்ள இதயத்தை, (மனித இதயத்தைவிட 40௦ மடங்கு பெரிதான) இயற்கை ஓட்டச்சிவிங்கிக்கு அளித்துள்ளது. பொதுவாக, சிறிய விலங்குகளுக்கு ஒரு நிமிடத்துக்கு அதிக இதயத்துடிப்பும் (கன்றுகுட்டிக்கு 170/140)) பெரிய விலங்குகளுக்கு குறைவான (பசு – 40/60௦, யானை – 25/30௦) இதயத் துடிப்பும் இருப்பது நியதி. ஆனால், இரண்டாவது பெரிய விலங்கான ஒட்டச்சிவிங்கிக்கு மட்டும் ஒரு நிமிடத்துக்கு 170 இதய துடிப்பை அளித்திருப்பது இயற்கையின் வினோதமாகும். இவ்வாறு பெரிய இதயத்தையும், ஒரு நிமிடத்துக்கு அதிக இதயத்துடிப்பையும் பெற்று இருப்பதால்தான் ஒட்டச்சிவிங்கியின் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்கிறது.

இயற்கையில் ஒட்டச்சிவிங்கிகளை கொல்லும் எதிரிகள் இருவர். ஒன்று மனிதன். மற்றுஒன்று சிங்கம். ஆனால், தீவனம் தின்று கொண்டோ, நின்றுகொண்டோ இருக்கும் ஒட்டச்சிவிங்கியை அவ்வளவு சுலபமாக சிங்கங்களால் கொல்ல முடியாது. ஏனெனில், ஒட்டச்சிவிங்கிகள் சுமார் 3 மைல் தூரம் பார்க்கும் திறனும், கூர்மையான கேட்கும் திறனும் உடையவை. அவை பின்னங்கால்களால் உதைத்தால், ஒரு சிங்கம் தலை சிதறி இறக்க நேரிடும். எனவே, சிங்கங்கள், ஒட்டச்சிவிங்கிகள் தண்ணீர் அருந்தும் இடங்களில்தான், பதுங்கி இருந்து தாக்கும்.




ஏனெனில், , ஒட்டச்சிவிங்கியின் முன்னங்கால்கள், பின்னங்கால்களைவிட நீளமாக இருப்பதாலும், கழுத்து நீளமாக இருப்பதாலும், பிற விலங்குகள் போல், அவற்றால், சுலபமாக தண்ணீர் குடிக்க முடியாது. எனவே, அவை குனிந்து, தண்ணீர் குடிக்க ஏதுவாக முன்னங்கால்கள் இரண்டையும் 45o பாகை அகற்றி வைத்து, தலையை இதயத்தின் மட்டத்திலிருந்து 7 அடி கீழ் நோக்கி கொண்டு வந்து, குனிந்து, சிரமத்துடன்தான் தண்ணீர் குடிக்க முடியும். நன்கு வளர்ந்த ஒரு ஒட்டச்சிவிங்கியின் சராசரி உயரம் 16 அடி ஆகும். ஆண் ஒட்டச்சிவிங்கி 18 அடி உயரம்கூட வளரும். ஒட்டச்சிவிங்கி தண்ணீர் அருந்தியபின், 2 வினாடிகளில் தரைப்பகுதியில் இருந்து தலையை 15-18 அடி உயரத்திற்கு தூக்கி விடும் திறன் கொண்டவை. இது போல் ஒரு மனிதன் தனது தலையை, மிகவிரைவாக குனிந்து தூக்கினால், உடனடியாக அவன் மயக்கமடைவான். ஆனால், ஒட்டச்சிவிங்கிகளுக்கு, எந்த வித பாதிப்பும் ஏற்படாததற்கு, முக்கிய காரணம் இயற்கையாக அமைந்துள்ள அதன் கழுத்தின் உள்ளமைப்பும் (Anatomy), மற்றும் அதன் உடல் இயங்கும் திறனும்தான் (Physiological function). தலை நிமிர்ந்து நிற்கும் போது, 300௦௦ இருக்கும் இரத்த அழுத்தம் அது தலையை குனிந்து தண்ணீர் குடிக்கும்போது 175 ஆக குறைந்துவிடும்.



இதயத்திலிருந்து, மூளைக்கு, இரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரசுத்தமானி (Carotid artery) தடிப்பாகவும், விரைப்பாகவும் (rigid) இருக்கும். அனால், மூளைக்கு அருகில் செல்லுமிடத்தில், ஒரு பகுதி, நெகிழும் தன்மையுள்ள ஒரு வலைபின்னல் (Retemirabile) போல் அமைந்திருக்கும். மறு பகுதி நேராக மூளைக்குச் செல்லும். அவ்வாறு அமைந்திருப்பதால், தலையைத் தாழ்த்தி, நீர் அருந்தும்போது, இதயத்திலிருந்து செல்லும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் இந்த வலைப்பின்னல் விரிவடைவதால், குறைந்துபட்டு (175) மூளையை பாதிப்பதில்லை. அத்துடன், தலை நிமிர்ந்திருக்கும்போது, தலை மேலிருந்து, இரத்தத்தை, திரும்ப இதயத்திற்குக் கொண்டு செல்லும் கழுத்துச் சிரை (jugular vein) 1" விட்டமும், நெளியும் திறனோடு (hose like) ஒரு வழித் தடுப்பு இதழோடும் (valves) அமைந்திருப்பதால், தலையைக் குனியும் போது, மூளைக்கு அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஒட்டச்சிவிங்கியின் கழுத்தில் அமைந்துள்ள, சிறப்பு அமைப்பு, பிற விலங்குகளுக்குக் கிடையாது.

இந்தச் சிறப்பு அமைப்போடு, மற்றுமொறு சிறப்பு அமைப்பும் ஒட்டச்சிவிங்கிக்கு உண்டு. அவை நின்றுகொண்டிருக்கும்போது, தேவையான குருதியை மூளைக்கு கொண்டுசெல்ல, அதிக அழுத்தத்துடன் இதயம், குருதியைப் பீய்ச்சுகிறது (pump). அவ்வாறு அதிக அழுத்தத்தோடு பீய்ச்சப்படும் இரத்தம், கீழ்நோக்கி, கால்களுக்கு செல்லும்போது, அந்த இரத்த அழுத்தத்தை தாங்கமுடியாமல், காலிலுள்ள இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தக் கசிவு ஏற்படும். அவ்வாறு, ஒட்டச்சிவிங்கிகள் பாதிக்கப் படாமல் இருக்க, அதன் கால்களின் தோல், கால் எலும்புகளுடன் மிக இறுக்கமாக ஒட்டியிருக்கும். அதனால், அதன் கால்கள், அதிக இரத்த அழுத்தத்தால் பாதிப்பதில்லை. ஒட்டச்சிவிங்கிகளின், இந்த கால் அமைப்பைப் பார்த்தே, விண்வெளி செல்லும் வீரர்களின் கால்கள், இரத்த அழுத்த வேறுபாடால் பாதிக்கப்படாமல் இருக்கத்தக்க உடையான (G Suite) தயார் செய்யப்பட்டுள்ளது.

இயற்கைதான் எத்தனை ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது !