Thursday, January 20, 2011

திரும்பிப்பார்க்கிறேன் – 10

அனுபவமே சிறந்த ஆசான் !

சிக்கலான சூழ்நிலைகளில், அனுபவம் மற்றும் தீர்க்க சிந்தனைகள் மூலம் நல்ல முடிவுகளை எடுத்து, அதன் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பது, மனித மூளையின் சிறப்புகளில் ஒன்றாகும். மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள தொழில் வல்லுநர்கள், எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வண்ணம் இருக்கவேண்டும். சிக்கலான சூழ்நிலைகளில், தங்கள் தொழில் நுட்ப அறிவுடன் கூட அனுபவம் மற்றும் பொது அறிவையும் உபயோகித்து, தீர்வு காண முயல வேண்டும்.

பிறருடைய அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, தங்கள் சொந்த அறிவை வளர்த்துக் கொள்பவனே அறிவாளி. நடப்பு சூழலில் பிரச்சினைகளை எதிர் கொள்ள, நமது கடந்தகால பசுமையான நினைவுகள் மற்றும் அனுபவங்கள் பெருமளவு கைகொடுக்கும். தங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்தும் யாவரும் அறிவாளிகளாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும் மட்டுமின்றி வெற்றியாளர்களாகவும் விளங்கலாம்.

சுமார் அரை நூற்றாண்டு கால கால்நடை மருத்துவ அனுபவம் கொண்ட நான், பல சமயங்களில் என்னுடைய தொழில் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன். அப்போதெல்லாம் என்னுடைய கல்வி அறிவைவிட, என்னுடைய அனுபவ அறிவே, பிரிசினைகளைத் தீர்க்க பெரிதும் உதவின. அவற்றிலிருந்து, ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

“கோயில் யானைக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வந்து பாருங்கள் டாக்டர்” என்று எனக்கு அழைப்பு வந்தது.

அது இரண்டு வயது யானை. கடந்த மூன்று வாரங்களாக அதற்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினார்கள். யானையை முழுவதும் பரிசோதித்தேன். கடந்த மூன்று நாட்களாக அது சாணம் போடவில்லை என்பது தெரிந்தது. மேலும் கடந்த மூன்று நாட்களாக யானை எதையும் சாப்பிடவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.

யானையின் பிரச்சினைக்கு தீர்வு அதை சாணம் போட வைக்கவேண்டும். எனவே அதற்கு திரவ பாரபின் மெழுகு கொடுக்க தீர்மானம் செய்தேன். ஆனால் அதைக் குடிக்க யானை விரும்பவில்லை. ஆனால் தண்ணீர் குடிக்க ஆர்வம் காட்டியது.

ஆனால் அதற்கு தண்ணீர் கொடுக்க யானைப்பாகன் முயலவில்லை. அது மட்டுமின்றி அவன் யானையின் பிரச்சினை தீர எந்த வித உதவியும் செய்ய விரும்பாதது போல ஆர்வமின்றி இருந்தான். யானைப் பாகனுடைய நடவடிக்கைகள் எனக்கு அவன் மேல் சந்தேகத்தை உண்டாக்கியது. அவன் வேண்டுமென்றே யானைக்கு தண்ணீர் தராமல் இருந்திருப்பான் என எனக்கு உள்மனம் சொன்னது. இதனால் என் மனதுக்குள் ஒரு பொறி தட்டியது. அவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட நான், கோவில் அதிகாரிகளிடம் சொல்லி, யானையின் பார்வையில் படாதவாறு யானைப்பாகனை வேறு இடத்துக்கு அனுப்பினேன்.

பிறகு, யானைப்பாகனின் மனைவியை அழைத்து வரச்செய்தேன். ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரண்டு பானைகளை எடுத்துவரச் செய்தேன். ஒரு பானையில் தண்ணீரையும், மற்றொரு பானையில் திரவ பாரபின் மெழுகை நிரப்பினேன்.

யானையை தண்ணீர் குடிக்கச் சொல்லி யானைப்பாகனின் மனைவியை உத்தரவிடச் சொன்னேன். யானைப் பாகனின் மனைவியும் பாகனோடு அன்றாடம் யானையை பராமரிப்பதால், பாகனின் மனைவி உத்தரவுக்கு யானைகள் கட்டுப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும்.

பாகனின் மனைவியை அழைத்து, முதலில் தண்ணீர் குடத்தை யானை கண்ணில் படும் வண்ணம் சில அடிகள் தூரத்தில் வைக்கச்சொன்னேன். பிறகு, தண்ணீர் குடிக்குமாறு யானைக்கு உத்தரவிடச் சொன்னேன். பாகனின் மனைவியும் அவ்வாறே செய்தாள். அவள் உத்தரவுக்கு அடிபணிந்து யானை சில அடி தூரத்தில் இருந்த தண்ணீர் குடத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால் அதன் கால் தூணில் கட்டபட்டிருந்ததால் குடத்தை அடைய முடியவில்லை. இதே போன்று சில முறை குடத்தை நகர்த்தி வைத்து, பாகனின் மனைவியை உத்தரவிடச் சொன்னேன். அவளும் அவ்வாறே செய்தாள். யானை தண்ணீர் குடிக்க துதிக்கையை குடத்துக்கு அருகில் கொண்டு வரும்போது, அவள் பானையை நகர்திவிடுவாள். இது போன்று பல முறை நடக்கவே, தொடர்ந்து தண்ணீர் குடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த யானைக்கு கோபம் வந்துவிட்டது. அதற்காகத்தான் நான் காத்திருந்தேன். உடனே பாகனின் மனைவி தண்ணீர் குடத்துக்கு பதிலாக திரவ பாரபின் மெழுகு நிரம்பிய பானையை யானைக்கு அருகில் கொண்டு வைக்கவே, கடும் கோபத்தில் இருந்த யானை ஒரே மூச்சில் பானையில் இருந்த திரவ பாரபின் மெழுகை குடித்துவிட்டது.

ஆனால் யானை குடித்த உடனேயே, அது தண்ணீர் அல்ல, வேறு எதையோ ஏமாற்றிக் கொடுத்துவிட்டோம் என்பதைக் கண்டுகொண்டது. இதனால் கடும் சினம் கொண்ட யானை, துதிக்கையால் அந்த குடத்தை தூக்கி அடித்தது. குடம் நொறுங்கியது.

கொஞ்ச நேரம் சென்ற பிறகு, யானையின் சினம் ஓரளவு தணிந்ததும், குடத்தில் தண்ணீர் கொடுக்கச் செய்தேன். தண்ணீர் குடித்த யானை கொஞ்ச நேரம் கழித்து சாணம் போட்டது. அதன் பிறகு யானைக்கு கரும்பு மற்றும் வெள்ளம் கொடுக்கச் சொன்னேன். அதன் பிறகு யானைக்கு சிகிச்சை செய்தேன்.

மருத்துவர்களுக்கு வெறும் மருத்துவ அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. கூடவே கொஞ்சம் அனுபவ அறிவும் வேண்டும். சூழ்நிலைக்குத் தக்க முடிவுகளை எடுக்கும் திறன் மற்றும் ஆற்றல் மருத்துவர்களுக்கு வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தும்.

அனுபவத்தைவிட சிறந்த ஆசான் யார் உளர்?

1 comment:

Anonymous said...

உங்கள் பதிவுகளை படித்து பெரும்பயன் அடைபவர்களில் நானும் ஒருவன். நன்றி.

Post a Comment