Thursday, May 6, 2010

திரும்பிப் பார்க்கிறேன்- 9

அதீத ஆர்வம், ஆபத்தை விளைவிக்கும்

யூரியா நச்சேற்றத்தால் பாதிக்கப்பட்ட பசுக்கள்

"தீவனம் சாப்பிட்ட மாடுகள் திடீரென இறந்தன" என்ற செய்தி சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி தொலைக்காட்சி செய்திகளில் வெளியாகின. இது ஒன்றும் புதிதல்ல. பல்லாண்டுகளாகவே இது போன்ற பிரச்சினைகள் உண்டு.

1959 டிசம்பர் மாதத்தில் நான் மாயவரத்தில் பணி புரிந்தபோது, ஒரு நாள் இரவு சுமார் 8 மணி அளவில் வெளியே சென்று, இரவு உணவு அருந்திவிட்டு எனது இரு சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது, மருத்துவமனை முன்பு ஒரு பியட் கார் நிற்பதை கண்டேன். யாரோ, அவசர சிகிச்சைக்கு வந்துள்ளார்கள் என்று எண்ணியபடியே மிதிவண்டியை வேகமாக ஓட்டி வந்தேன். நான் மருத்துவமனைக்கு முன் வந்து மிதிவண்டியில் இருந்து இறங்குமுன், மருத்துவமனை அலுவலக அறையில் மின் விளக்கு எரிவதை பார்த்ததோடு, எனது இரவு பணியாள் யாரோ ஒருவரோடு பேசுவதையும் கேட்க முடிந்தது. அப்போது, காரில் இருந்த காரோட்டி

"டாக்டர் அய்யா வந்தாச்சு"

என்று உரத்த குரலில் கூவினார்.

உடனே, எனது அலுவலக அறையிலிருந்து எனது பணியாளும், ஒரு இளைஞரும் என்னை நோக்கி வந்தார்கள்.

அந்த இளைஞர்

"டாக்டர் அய்யா, ரொம்ப அர்ஜென்ட். இன்னிக்கு சாயங்காலம், என்னோட பசு மாடுங்க சிலதுங்க செத்துடிச்சு. நீங்க உடனே என்னோட வந்து மத்த பசுக்களயாவது காப்பாத்துங்க" என்று கேட்டுகொண்டார்.

உடனே, நாற்பது ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் பணியாற்றும் எனது பணியாளர்.

"'தேவையான எல்லாம் தயாரா எடுத்து வச்சிருக்கேன். இவரு இங்கேருந்து இருபது மைல் தூரத்துல இருக்கற ஒரு கிராமத்தோட பெருந்தனக்காரரோட மகன். இவங்களோட மாடுங்களோட வைத்தியத்துக்கு இங்கதான் வழக்கமா வருவாங்க. அதனால, உடனே இவரோட போய், வைத்தியம் செஞ்சிட்டு, ராத்திரியே திரும்பி வந்துடலாம் அய்யா"

என யோசனை கூறினார்.

அந்த இளைஞரின் பரிதாப நிலை கண்டு, உதவ மனம் எண்ணினாலும், காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக ஏற்பட்ட உடல் அசதி காரணமாகவும், அத்துடன் குளிர் இரவில் சரியான பாதையல்லாத, இருபது ௦மைல் தூரமுள்ள, மின் வசதியும் இல்லாத, அந்த குக்கிராமத்திற்கு சென்று வைத்தியம் செய்துவிட்டு, மறுநாள் காலை ஆறு மணிக்குள் வரமுடியுமா? என்ற சந்தேகத்துடனும், தயக்கத்துடனும், எனது தங்கும் பகுதி நோக்கி, எந்த பதிலும் கூறாமல் நடக்கலானேன்.

எனது தயக்கத்தை புரிந்துகொண்ட எனது பணியாள் என்னை பின் தொடர்ந்து வந்து ,

"ஐயா, இவருடைய தந்தையார், ஒரு படித்த, நாகரீகம் தெரிந்த, உயர்ந்த மனிதராவார். இவரிடம், சுமார் 300௦௦ மாடுகள் உள்ளன. நமது மருத்துவமனைக்கு, பல தடவைகள், பல வகைகளில் உதவியுள்ளார். ஆகையால், நாம், சிரமம் பார்க்காமல், கட்டாயம் போய் வரணும்"

என உரிமையுடன் வேண்டுகோள் வைத்தார்.

"சரி"

என்று கூறிவிட்டு, எனது உடைகளை மாற்றிக் கொண்டு, அந்த இளைஞருடன், அவருடைய காரில் பயணித்தேன்.

காரில் போகும்போதுதான், அந்த இளைஞரிடம்

"பசுக்கள் திடீரென இறக்க, என்ன காரணமாக இருக்கலாமென எண்ணுகிறீர்கள்?"

என வினவினேன்.

அதற்கு அவர்

"எனது தந்தையார் தினந்தோறும் மாலையில் கால்நடைகளுக்கு தீனி இடுவதை மேற்பார்வை இடும்போது வானொலி கேட்பது வழக்கம். இன்று மாலை நிகழ்ச்சி ஒன்றில், கால்நடைகளுக்கு தேவையான புரத சத்துள்ள புண்ணாக்கு போன்ற விலை உயர்ந்த தீவனத்துக்கு பதில், தீவனத்தோடு யூரியா கலந்து கொடுத்தால், கால்நடை வளர்க்கும் செலவு கணிசமாக குறையும்" எனக்கூறக் கேட்டுள்ளார்.

உடனடியாக விவசாய நிலங்களுக்கு போட வாங்கி வைத்திருந்த யூரியா உரமூட்டையில் இருந்து எல்லாப் பசுக்களின் தீவன தொட்டியிலும் ஒரு கைப்பிடி அளவு யூரியாவைக் கலந்துள்ளார். தீவனம் தின்ற சில நிமிடங்களில் அதிகமாக பால் தரும் மூன்று சிந்தி கலப்பின பசுக்கள் வயிறு உப்பி, வயிற்று வலியுடன் கீழே விழுந்து இறந்துவிட்டன. உடனடியாக மற்ற எல்லா மாடுகளும் தீவனம் உண்ணாமல் தடுக்க, தீவன தொட்டிகளை எடுத்து, யூரியா கலந்த தீவனங்கள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுவிட்டது. இருந்தாலும், பல மாடுகளின் வாயிலிருந்து, உமிழ் நீர் ஒழுகிக்கொண்டே இருப்பதோடு, அவை ஒரு வகை பதைபதைப்புடன் காணப்படுகின்றன. ஆகையால்தான், உங்களை அழைத்துச் செல்ல உடனடியாக இங்கு வந்தேன்"

என்று கூறிவிட்டு, காரோட்டியை வேகமாக போகுமாறு உத்திரவிட்டார்.

கார் காரிருளை கிழித்துக்கொண்டு மிக வேகமாக சென்றது.

ஆனால், எனது மனோரதமோ அதைவிட வேகமாக நோயுற்ற கால்நடைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்திக்க தொடங்கியது.

ஏனெனில், அந்த நாட்களில் யூரியாவின் நச்சுத்தன்மை பற்றி, இந்திய கால்நடை மருத்துவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. கல்லூரியிலும் யூரியாவின் நச்சுத்தன்மை பற்றி பயிற்றுவிக்கபடவில்லை.

எந்த கால்நடை மருத்துவ புத்தகங்களிலும் இது பற்றி எதுவும் எழுதப்படவில்லை. அப்போதுதான் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், யூரியாவை கால்நடைகளின் உணவோடு கலந்து கொடுப்பதற்கான ஆரம்பகால ஆராய்சிகள் செய்யப்பட்டு வந்தன. ஆராய்ச்சி முடிவுகளும் முற்றுப்பெறாத நிலை. ஆனாலும், நச்சுப் பொருள் என்னவென்று தெரியாத போது, எவ்வாறு மருத்துவம் செய்வது என்பது பற்றி 'பொது நியதி' (General principles) கல்லூரியில் பாடம் நடத்தப்பட்டிருந்ததால், அதன்படி மருத்துவம் செய்வதென முடிவு செய்தேன்.

சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, அந்த கிராமத்தின் நடு நாயகமாக விளங்கிய வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். மிகுந்த துயரத்துடன் அந்த பண்ணையார் எங்கள் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்க, அவரை சுற்றி பல ஆட்கள், கையில் லாந்தர் விளக்குடன் நின்றிருந்தனர்.

என்னை பார்த்தவுடன், அந்த பண்ணையார் பேச சிரமப்பட்டு, நா தழுதழுக்க பேசலானார்.

"வாங்க டாக்டர் அய்யா. எல்லாம் என் விதி. எனது மூத்த பண்ணையாள் யூரியாவை போட வேணாம்னு தடுத்தும், என்னோட போதாத காலம். நான் அவனோட பேச்சை கேட்காமல், என் கையாலேயே யூரியாவை போட்டு, அநியாயமா மூணு நல்ல பசுக்கள கொண்ணுட்டேன். இந்த மாவட்டத்துல, விவசாயத்துலயும், கால்நடை வளர்ப்புலேயும் எந்த புது உத்தி வந்தாலும், முதல்ல அதை கடைபிடிப்பவன் அப்படிங்கிற கர்வத்துல, இந்த தவற செய்துட்டேன். நாட்டு மருத்துவ முறைப்படி, அவசர சிகிச்சையா எல்லா பசுக்களுக்கும், முட்டையின் வெள்ளை கருவை பாலில் கலந்து அடிச்சி புகட்டியிருக்கேன். மத்த மாடுகளை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்"

என வேண்டிகொண்டார்.

யூரியா உட்கொண்ட பதினோரு பசுக்களையும் பரிசோதித்தேன்.

சில பசுக்களுக்கு வயிறு சிறிது உப்பி இருந்தது. எல்லா பசுக்களுக்கும் வாயிலிருந்து உமிழ் நீர் வடிந்துகொண்டே இருந்தது. எல்லா பசுக்களும் அசாதாரணமான ஒரு பரிதவிப்போடு நிற்பது தெரிந்தது. அந்த நாட்களில் இப்போது உள்ளது போல் கால்நடை மருத்துவம் செய்ய பல வகையான ஊசி மருந்துகள் கிடையாது. கையில் இருந்த கால்சியம் (Calcium) ஊசியை எல்லா மாடுகளுக்கும் செலுத்தினேன். திரவ மாற்று சிகிச்சை (Fluid therapy) கொடுப்பதென முடிவெடுத்தேன்.

மனிதனுக்கு கொடுப்பதற்கான க்ளுகோஸ் மருந்தே, இப்போது வருவது போல் புட்டிகளில் (Bottle) வராது. இருபது மில்லி கொண்ட கண்ணாடி குமிழ்களில்தான் வெளி சந்தையில் கிடைக்கும். அந்த க்ளுகோஸ் குப்பிகளும் நகரங்களில் மட்டுமே கிடைக்கும். க்ளுகோஸ் ஊசிபோட வேறு வகையில் சிந்தித்தேன். அந்த பண்ணையாரின் வீட்டின் பின்புறம் தென்னந்தோப்பு இருந்ததால், நிறைய இளநீர் காய்களை பறித்து வரச்சொல்லி, அதில் இருந்த இளநீரை சேகரித்து, எல்லா பசுக்களுக்கும் தலா ஐநூறு மில்லி வீதம் சிறை வழியாக (i/v) இரத்தம் மூலம் செலுத்தினேன். பிறகு, யூரியாவின் காரத்தன்மையை குறைக்க, ஒவ்வொரு பசுவுக்கும் ஐம்பது எலுமிச்சை பழங்களை பிழிந்து, அந்த சாரை உள்ளுக்கு புகட்டினேன்.

காலை மருந்துக்கடை திறந்தவுடன் strnacin மாத்திரை வாங்கி அந்த பசுக்களுக்கு தலா நான்கு மாத்திரைகள் வீதம் வாய் மூலம் உள்ளுக்கு கொடுக்குமாறு கூறி சீட்டு எழுதி கொடுத்துவிட்டு, பிறகு அங்கிருந்து கிளம்பி, அதிகாலை நான்கு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன்.

அதேபோல மாத்திரைகளை வாங்கி கொடுத்திருந்தார்கள்.

மறு நாள் மாலை நான் சென்று பார்த்தபோது, எல்லா பசுக்களும், எவ்வித நோய்குறிகளும் இன்றி, நன்றாக இருந்தன.

இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால், எந்த ஒரு புதிய தொழில் நுட்பமோ அல்லது மருத்துவ முறை பற்றியோ தெரிய வந்தால், தகுந்த, தகுதி வாய்ந்தவர்களின் ஆலோசனை இன்றி, உடனே தானே அதை செயல்படுத்த முயன்றால் இது போன்ற சிக்கல்கள் வரும் என்பதை உணர்த்தவே.

மேற்கண்ட நிகழ்ச்சியில் அந்த பண்ணையார் வானொலி நிகழ்ச்சியை கேட்டவுடன், அதை செயல்படுத்தவேண்டும் என்ற அதீத ஆர்வமுடன் செயல்பட்டதால்தான், விலைமதிப்பு மிகுந்த தனது பசுக்களை இழக்க நேரிட்டது. அவரே, செய்தி கேட்ட பிறகு, தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர் ஒருவரை அணுகி, இது பற்றி கேட்டிருந்தால், கால்நடை மருத்துவர் அவருக்கு, தீவனத்தில் யூரியாவை எப்படி கலக்க வேண்டும் என்பது பற்றிய நுணுக்கங்களை சொல்லி கொடுத்திருப்பார்.

கடந்த 1974 ஆம் ஆண்டே இதுபோன்ற ஒரு பிரச்சினை ஒன்று வெடித்தது. மாயூரத்தை சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தினரின் பண்ணையில், பெரிய நிறுவனம் ஒன்று தயாரித்த யூரியா கலந்த தீவனம் உட்கொண்ட மாடுகள் சில திடீரென இறக்க, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தீவனத்தை உரிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில், தீவனத்தில் யூரியா சரியான முறையில் கலக்கப் படவில்லை. அதன் காரணமாகவே, தீவனம் உட்கொண்ட பசுக்கள் இறந்தன என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

எனவே, அக்குடும்பத்தினர் அந்த தீவன தயாரிப்பு நிறுவனத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றனர். தீவன தயாரிப்பு நிறுவனமோ உலகப் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனம். ஆகவே, இதை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வில்லை. அந்த குடும்பத்தினர் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளை குறுக்கு வழிகளில் முடக்க முயன்றனர். ஆனால், அந்த குடும்பத்தினர் நல்ல படித்த, விவரம் தெரிந்தவர்கள். எனவே, சட்டபூர்வ நடவடிக்கைகளை குலைக்க நிறுவனம் எடுக்கும் தவறான முயற்சிகளை, அப்போது போலீஸ் உயரதிகர்ரியாக இருந்த காலஞ்சென்ற திரு. அருள் அவர்களிடம் எடுத்துரைத்து, நியாயம் கிடைக்கவில்லை எனில் உச்ச நீதிமன்றம் வரை போவோம் என சொல்ல, திரு.அருள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அந்நிறுவனம் பின்வாங்கி, தனது தவறை ஒத்துகொண்டது. அவர்கள் எழுது பூர்வமான மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின்பே, அக்குடும்பத்தினர் அப்பிரச்சினையை முடித்தனர்.

சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள், “அதீத ஆர்வம், ஆபத்தை விளைவிக்கும்என்று.

3 comments:

vikram said...

It beats me why you have not submitted this article in Tamilish.

எல் கே said...

உங்களை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_21.html

Angel said...

thanks for the info about castor leaves .
already i wrote a big comment some thing went wrong .,got to type them again.
well first thanks to karthik for introducing your site .few yrs ago we had two goats .they died suddenly before that they ate cabbages and carrots.
i thought i had done something wrong .my neighbour said that evening the goats had eaten castor leaves thrown from the other side of compound wall .at that time i didnt believe her .all these years i was guilty that they died because of me .now i am relieved after reading your post about poison in castor plant leaves
thank you for sharing your experiences .

Post a Comment