Thursday, November 5, 2009

திரும்பிப்பார்க்கிறேன்-8


புத்தக அறிவு எவ்வளவு இருந்தாலும், அனுபவ அறிவும் தேவை
-------------------------------------------------------------------------------------
அந்த மத்தின் தலையை தட்டி எடுத்துவிட்டு, தினந்தோறும் வெண்ணையில் பட்டு, நனைந்து கடினமான கைப்பிடியை மட்டும் தனியே எடுத்து, ஒரு முனையை கொடுவாளால் கூராக செதுக்கினார் (படம் -1).

படம் -1
அது கூர் சீவப்பட்ட பென்சில் போல ஆயிற்று. பின், வெளியே நீட்டிக்கொண்டிருந்த முன்னங்கால்களின் கணுக்காலில் குளம்பை சுற்றி ஒட்டி இருந்த தோல் பகுதியை Embryotomy knife (படம்.-2) மூலம் வெட்டி எடுக்குமாறு கூறினார். அவ்வாறு தோலை வெட்டிய உடன், அந்த வெட்டிய பகுதியில் கூராக்க பட்ட கைப்பிடியின் கூர்முனையை 45 டிகிரி சாய்வாக உள்நோக்கி வைத்து, ஒரு கட்டையில் தனது பலம் கொண்டமட்டும் அந்த கைப்பிடியின் மறுமுனையில் அடித்தார்.

படம் -2
அடித்த வேகத்தில் கணுக்காலில் இருந்து தோள் பட்டை வரை தோல் கிழிந்தது. மத்தின் கைப்பிடி எடுத்து, அதை கூர் சீவியதன் அர்த்தத்தை என்னால் அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அறுவை மருத்துவ முறைப்படி, இறந்த கன்றை வெட்டி எடுக்க உபயோகப்படும் உளியின் (Deburis Chisel)முனை ஒரு தலை கீழாக எழுதப்பட்ட 'ப' போல் கூராக இருக்கும். அடுத்த முனையில் கைப்பிடி இருக்கும். குளம்பை சுற்றி உள்ள தோலை சிறிது வெட்டி விட்டு அந்த உளியின் கூரான பகுதியை வெட்டி எடுத்த பகுதியில் வைத்து, கைப்பிடியை பிடித்து வேகமாக உள்நோக்கி அழுத்தினால் தோள்பட்டை வரை தோல் வெட்டப்படும்.(படம்-3)


அதற்குப்பின் அந்த காலை பிடித்து திருகினால், தோள்பட்டை வரை, உடலிலிருந்து பிரித்து சுலபமாக வெளியில் எடுத்து விடலாம். பின் அதுபோல் மறு முன்னங்காலையும் வெட்டி எடுத்து விடலாம். அவ்வாறு இரு முன்னங்கால்களையும் வெட்டி எடுத்து விட்டால், கையை கர்பப்பையில் விட்டு, இறந்த கன்றின் தலையை சுலபமாக நேர் செய்து வெளியே எடுத்துவிட முடியும்.

இந்த முறையில் இரு கால்களையும் வெட்டி எடுக்க அந்த கடினமான மர மத்தின் கை பிடியை கத்தியாக உபயோகித்து, இரண்டு கால்களையும் வெட்டி வெளியே எடுத்தேன். பிறகு சுலபமாக கர்ப்ப பையினுள் கையை விட்டு பார்த்த போதுதான், அந்த இறந்த கன்றின் தலை இடுப்பு எலும்புக்கு கீழே (Pelvic Bone) சென்று சிக்கி இருந்தது (படம்-4 & 4A) தெரிந்தது.

படம்-4

அப்பசு கன்று போட முடியாமல் தவிக்கும் போது, பிரசவ முறை பற்றி எந்த அறிவும் இல்லாத சில ஆட்கள், தலையை நேராக்காமல், வெளியே தெரிந்த இரண்டு கால்களை மட்டும் பிடித்து இழுத்ததால் தலை இடுப்பு எலும்புக்கு கீழ் சென்று சிக்கிக் கொண்டது.
அது தெரியாமல் இரண்டு நாட்களாக பலரும் காலை மட்டும் திரும்ப திரும்ப பிடித்து இழுத்ததால், கன்று மூச்சு திணறி கர்ப்ப பையினுள்ளேயே இறந்து, உப்பி விட்டது. அதனால் தான் கர்ப்ப பையில் கை விட்டு பரிசோதனை செய்ய கூட இடமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது.

படம்-4A

கன்றின் கால்களை வெட்டி எடுத்த உடன், தலையை நேர் செய்து, இடுப்பு எலும்புக்கு மேலே கொண்டு வந்து, கயிற்றை கட்டி மெதுவாக வெளியே எடுத்து, இறந்த கன்றை தாயிடமிருந்து பிரித்தேன். பிறகு, தேவையான மருத்துவம் செய்துவிட்டு, காலை ஆறு மணிக்குள் மறுபடியும் மாயவரம் வந்து சேர்ந்தேன்.

கிராமங்களில் கன்று போட முடியாமல், பிரசவ அவஸ்தை படும் கால்நடைகளுக்கு எல்லா கால்நடை மருத்துவர்களாலும், கன்றை வெளியே எடுத்து மருத்துவம் செய்ய முடியாது. நல்ல திடகாத்திரமான உடலும், எந்த நிலையிலும் தளராது நின்று வேலை செய்யும் திறமையும், நல்ல மனோ திடமும், சுற்றுப்புற சூழலை அனுசரித்து வேலை செய்யும் திறனும், ஆழ்ந்த மருத்துவ அறிவும் உள்ளவரால் மட்டுமே பிரசவ கேஸ்களை வெற்றிகரமாக மருத்துவம் செய்ய முடியும். அத்துடன், நல்ல திடகாத்திரமான, வலிமையுள்ள இரு உதவியாளர்களும், தக்க உபகரணங்களும் தேவை.

இந்த நிகழ்வு, எனக்கு இரண்டு முக்கிய பழமொழிகளை நினைவூட்டியது.

1. "சிறு துரும்பும் பல் குத்த உதவும்"
2. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"

அத்துடன், எலும்பு கூடும், சதையும் இணைந்தால்தான், ஒரு முழு உருவம் தோன்றுவது போல, கல்லூரி புத்தக அறிவும், அனுபவ அறிவும், சேர்ந்தால்தான் ஒரு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவராக திகழ முடியும் (Bony theoretical knowledge must be covered with flesh of practice to become a full-fledged veterinarian) என்று உலக புகழ் பெற்ற கால்நடை மருத்துவரான ஜேம்ஸ் ஹேரியட் எழுதி உள்ளது என் நினைவிற்கு வந்தது.

என்னுடைய பணியாள் ஏழு வயது பையனாக வேலையில் சேர்ந்து, பல ஆண்டுகளாக பல கால்நடை மருத்துவர்களின் கீழ் வேலை செய்தபோது, ஒவ்வொரு கால்நடை மருத்துவரும் கடைபிடித்த பல புதிய உத்திகளை கூர்ந்து கவனித்து வந்ததால், அவரால் அன்று எனக்கும் உதவ முடிந்தது.

இந்நிகழ்வு, பின்னாட்களில் பல கடினமான பிரசவ கேசுகளை வெறறிகரமாக கையாள உதவியாக இருந்தது.

1 comment:

SureshBabu said...

Migavum Arumaiyaana vilakangal. Software Engineerana naanum purithu kollumaaru elimaiyaaga irunthathu.
- Suresh

Post a Comment