சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவ மனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் ஒரு குழந்தையின் கழுத்திலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கியதாக செய்தி தாள்களில் வந்த செய்தியை படித்திருப்பீர்கள். இது தவறானாலும், அந்த தொழிலாளியின் துணிவையும், திறமையையும் யாராலும் மறுக்க முடியாது. அவர் முறையாக மருத்துவம் பயிலா விட்டாலும், பல மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்யும் பொது உடன் இருந்து பார்த்து பழகியதால், அந்த தொழிலை துணிவுடன் அறுவை மருத்துவம் செய்துள்ளார். அதற்கும் ஒரு தனி திறமை தேவை. என்னுடைய பணிகாலத்திலும் இது போன்று நடந்த ஒரு நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திருவெண்காட்டில் என் நான்கு மாத பணிக்குப்பின் டிசம்பர் மாத மத்தியில் மாயவரம் (இன்றைய மயிலாடுதுறை) கால்நடை மருத்துவமனைக்கு மாற்றபட்டேன். அப்போது மாயவரம் கால்நடை மருத்துவமனை ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்தது. வீட்டின் முன் பகுதி மருத்துவமனையாகவும், பின் பகுதி மருத்துவரின் வீடாகவும் இருந்தது. இரவில் அவசர மருத்துவத்திற்கு வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவருக்கு உதவ ஒரு பணியாளர், மருத்துவமனையில் பணியில் இருப்பது உண்டு.
நான் மாயவரத்தில் பணியில் சேர்ந்த மறுநாள் இரவு இரண்டு மணிக்கு, இரவு பணியில் இருந்த பணியாள், என்னை எழுப்பி, 'வைதீஸ்வரன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பசு கன்று ஈன முடியாமல் தவிப்பதாகவும், உடனடியாக வந்து உதவுமாறும் வேண்டி ஒரு விவசாயி வந்துள்ளார்' என்று கூறினார்.
அப்போது கடும் குளிர். ஒரே இருட்டு வேறு. ஆகவே, வெகு தொலைவில் இருந்த அந்த கிராமத்துக்கு சென்று, திரும்புவது சிரமம் என்பதால், அந்த பசுவை ஒரு வண்டில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறவும் என்று சொன்னேன்.
அதற்கு, என் பணியாளர், அன்றைய என் வயதின் அளவை போல் இரு மடங்கு அனுபவம் கொண்டவர், 'உங்களை அழைத்து போக வாடகை காருடன் வந்துள்ளார். நானும் தேவையான எல்ல மருந்துகள் மற்றும் உபகரணங்களை தயாராக எடுத்து வைத்துள்ளேன். உடனடியாக சென்று வந்துவிடலாம் அய்யா' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.
முதலில் தயங்கிய நான், பிறகு அந்த கடுங்குளிர் இரவில் அந்த கிராமத்துக்கு சென்று மருத்துவம் செய்ய முடிவெடுத்து, உடை மாற்ற தயார் ஆனேன். ஆனாலும் பலவித என்ன அலைகள் மனதில் தோன்றி என்னை குழப்பமடைய செய்தன.
மருத்துவர் என்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை செய்ய வேண்டும்தானே? அதுதானே மருத்துவர் கடமை. அதில் குழம்ப என்ன இருக்கிறது? என்றுதான் பொதுவாக யாருமே நினைப்பார்கள்.
ஆனால், மருத்துவம் செய்ய வெளியூர் செல்ல நான் தயங்கியதற்கு என்ன காரணம்? அன்றைய அரசு சட்ட திட்டங்கள் என்ன?
இவை குறித்து நான் அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.
இவை குறித்து நான் அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment