அன்றைய தஞ்சை மாவட்டத்திலிருந்த திருவெண்காட்டில் அரசு கால்நடை மருத்துவமனையை முதன் முதலாக தொடங்கியதோடு, எனது அரசு பணியையும் தொடங்கிய முதல் நாளன்று என்னிடம் சிகிச்சைப்பெற கொண்டுவரப்பட ஆட்டுக்குட்டியையும் , அதையொட்டி நடந்த நிகழ்வுகளையையும் என்னால் இன்றும் மறக்கமுடியவில்லை. அந்நிகழ்வே பின்னாளில், பலரும் படிக்க தயங்கிய நோய்த்தீர்ப்பியலை (Clinical Medicine and Therapeutics) எனது மேற்படிப்புக்கு தேர்வு செய்ய துண்டுகோலாக அமைந்தது.
அன்றைய திருவெண்காடு, சிறிய உணவகம் மற்றும் மின்சாரம் கூட இல்லாத ஒரு சிற்றூர் ஆகும். சீர்காழியில் பயிற்சிக்குச் சேர்ந்த ஒரு வாரத்துக்குள்ளேயே திருவெண்காட்டில் திறக்கவிருந்த மருத்துவமனைக்கு என்னை மாற்றி உத்தரவு வந்தது. அத்துடன், சீர்காழி மருத்துவமனையிலிருந்து திருவெண்காடு மருத்துவமனைக்கு முதலுதவிக்கு தேவையான சில மருத்துகளை பெற்றுக்கொள்ளு மாறும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அன்று , திருவெண்காட்டில் கால்நடை மருத்துவமனைக்கென்று தனி கட்டடம் இல்லாததால், ஊராட்சி மன்றத்தலைவரின் வீட்டின் எதிர்புறமிருந்த ஒரு கடையில், தற்காலிகமாக மாவட்ட அதிகாரியால் 1959, ஆகஸ்ட் மாதம், 3 ம் தேதி, கால்நடை மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது. ஒரு வாரமே பயிற்சிபெற்ற நான் எந்தவித மருத்துவக்கருவிகளுமின்றி, சீர்காழி மருத்துவர் கொடுத்த ஓரிரு மருந்துகளுடன் எனது முதல் நாள் பணியைத்தொடங்கினேன்.
திறப்பு விழா முடிந்து, மாவட்ட அதிகாரியும், மற்றவர்களும் சென்றபின், எனது எண்ணம் முழுதும், இந்த வசதியில்லா ஊரில், எங்கு தங்குவது? எங்கு சாப்பிடுவது? என்பதாகவே இருந்தது அப்பொழுது, பக்கத்துக்கு கிராமத்திலிருந்து ஒருவர் , ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சைக்கிளில் வைத்து , மருத்துவம் செய்ய கொண்டுவந்தார். "டாக்டர் அய்யா, இந்த ஆட்டுக்குட்டி, பக்கத்துக்கு தோட்டத்திலிருந்து வெட்டி எறியப்பட்ட ஆமணக்கு இலைகளை தின்றுவிட்டது. உடனடியாக ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்." என்று வேண்டினார்.
நான் பழைய தென்னாற்காடு மாவட்டதைச்சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில், புஞ்சை நிலங்களில், கடலைப்பயிருடன் ஊடு பயிராக கம்பு, துவரை மற்றும் ஆமணக்கு பயிர் இடுவதுண்டு. அவ்வாறு பயிர் இடப்பட்ட நிலங்களில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், ஆமணக்கு இலைகளை தின்பதை, சிறு பையனாக பார்த்திருக்கி்றேன். அவ்வாறு தின்னும் ஆடுகளை விரட்டியோ அல்லது பிடித்து பட்டியில் அடைத்தோ விடுவார்கள். எனக்கு தெரிந்து எந்த ஒரு ஆடும் இறந்ததில்லை.
நான் கல்லூரியில் படித்தபோது ஆமணக்கு இலையை கால்நடைகள் உண்டால் கேடுவருமென்று யாரும் கூறவில்லை. ஆகையால், "ஆமணக்கு இலையை தின்றதால் ஆபத்து ஒன்றுமில்லை. அதற்கு எந்த வைத்தியமும் தேவையில்லை" என்று கூறினேன்.
ஆனால், அந்த விவசாயியோ, " இல்லை அய்யா, ஆட்டுக்குட்டி இறந்துவிடும். ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்." என்று திரும்ப, திரும்ப வலியுறுத்தினார். நான் எனது கிராமத்தில் கண்ட அனுபவத்தை கூறி , "ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் ஆகாது " எனக்கூறி எந்த வைத்தியமும் செய்யாமல் அனுப்பிவைத்தேன்
காலை அலுவல் நேரம் முடிந்தவுடன், உள்ளூர் கோவிலிலிருந்து அனுப்பட்ட பிரசாதத்தை மதிய உணவாக உண்டபின், இரவு எங்கு தங்குவது எண்ணதிலேயே மூழ்கி,மருத்துவமனையில் உட்கார்ந்திருந்தேன். காலையில் வந்த விவசாயி சைக்கிளின் பின் ஒரு கூடையை வைத்துக்கொண்டு மறுபடியும் வந்து நின்றார். அந்த கூடையிலிருந்து இறந்த ஆட்டுக்குட்டி ஒன்றை எடுத்து வந்து " டாக்டர் அய்யா, காலையில் பலமுறை கேட்டும், வைத்தியம் செய்யாமல் ,
ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் ஆகாது என்று கூறி அனுப்பி வைத்தீர்கள் . இப்பொழுது பாருங்கள் ஆட்டுக்குட்டி இறந்து விட்டது." என்று கூறி விட்டு எனது பதிலுக்கு கூட காத்திராமல் விரைந்து சென்று விட்டார்.
எங்களூரில் ஆமணக்கு இலையைத்தின்ற பல ஆடுகளில் ஒன்று கூட இறக்காதபோது ஏன் இந்த ஆட்டுக்குட்டி மட்டும் இறந்தது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.அந்த மாவட்டத்தில் வேலை செய்த பல மூத்த கால்நடை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான விளக்கத்தை யாரிடமிருந்தும் என்னால் பெறமுடிய வில்லை. பின்னாளில், சிறப்புப் பயிற்சி பெற (Specialization) படிக்கும் போது தான் , மேலைநாட்டு வல்லுனர்களின் கட்டுரைகளிலிருந்து, அந்த ஆட்டுக்குட்டி இறந்த காரணத்தை அறிந்தேன். அது பற்றி அடுத்த இடுகையில்
Tuesday, May 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல இடத்திலே தொடரும் போட்டு இருக்கீங்க.
ஆனா எனக்கு இப்பவே தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாற்றம்தான்.
தமிழிஷ் தொழில்நுட்ப பகுதியில் போட்டு இருக்கிறீர்களே. படைப்புகள் -> அனுபவம்னு ஒரு பகுதி இருக்கே. அது பொருத்தமாக இருக்குமே.
Post a Comment