Tuesday, May 26, 2009

திரும்பிபார்க்கிறேன்- 2





அழகு இருக்கும் இடத்திலே, ஆபத்து இருக்கும் மறைவுலே


ஆமணக்கு செடி பற்றியும், அதன் நச்சுத்தன்மை பற்றியும் தெளிவாக அறிந்தால்தான் ஆமணக்கு இலைகளை தின்ற தஞ்சை மாவட்ட ஆட்டுக்குட்டி மட்டும் ஏன் இறந்தது என்பது விளங்கும்.

பொதுவாக, கிராமங்களில் ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெய் எடுத்து (Castor Oil), அதை குழந்தைகளுக்கு மலமிளக்கியாக (laxative) கொடுப்பார்கள். பண்டைய காலத்தில் இந்த எண்ணெய் விளக்கு எரிக்க பயன்படுத்தப் பட்டதால், இதை விளக்கெண்ணை என்றே அழைப்பார்கள். ஆனால், இன்று பல தொழிற்சாலைகள் இதை மூல பொருளாக வைத்து பல வித தொழில்கள் இயங்க தேவையான பொருள்களை தயார் செய்கிறார்கள். ஆனால் எண்ணெய் எடுத்தபின் மிச்சமிருக்கும் கழிவு பொருளிலுள்ள நச்சு தன்மை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

[Photo]ஆமணக்கு செடி வெப்ப மற்றும் மித தட்ப வெப்ப பகுதிகளில் வளரும், பூக்கும் வகை சேர்ந்த தாவரமாகும். இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எத்தியோப்பியா (Ethiopia) பகுதி என்று சில குறிப்புகள் கூறினாலும், கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய கல்லறைகளில் ஆமணக்கு விதைகள் கண்டெடுக்க பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். கி மு 1552 ஆம் ஆண்டு எழுதப் பட்டதாக கருதப்படும் ஈபர்ஸ் பேபிரஸ் (Eber's Papyrus) என்ற மருத்துவ சுவடியில், ஆமணக்கின் மலமிளக்கும் மருத்துவ குணம் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது. உலக பேரழகி கிளியோபாட்ரா (Cleopatra) தன் கண் அழகை கூட்ட ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆமணக்கு செடி யாரும் பயிர் செய்யாமலே, பயனற்ற நில[Photo]ங்களிலும், தண்ணீர் தேங்காத ஆற்று படுகைகளிலும் அதிகம் காணப்படும் தாவரமாகும். இதன் பூக்கள் பற்பல வண்ணங்களில் உள்ளதால், கனடா போன்ற நாடுகளில், பூங்கா மற்றும் பங்களா போன்ற இடங்களில் அலங்கார செடிகளாக வளர்க்க படுகின்றன. ஆனால், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் இதை வர்த்தக நோக்கோடு பணப் பயிராக பயிர் செய்கிறார்கள். உலக நாடுகளில் ஆமணக்கு விதைகளை மிக அதிக அளவில், அதாவது ஆண்டுக்கு சுமார் 8,30,000 டன் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான்.



ஆமணக்கு செடியின் இலை, அதன் விதை மற்றும் எல்லா பாகங்களிலும் ரெசின் (Ricin) என் நச்சுப் புரத வகையை (Toxalbumin) சேர்ந்த மிக கொடிய நஞ்சு உள்ளது. இந்த நஞ்சு, எல்லா உயிரினங்களையும் கொல்லும் நஞ்சு[Photo]களின் வரிசையில் முதல் இரண்டு நஞ்சுகளில் ஒன்றாகும்.
இந்த நஞ்சு, நல்ல பாம்பின் நஞ்சைவிட இரு மடங்கும், சயனைடைவிட (Cyanide) 6000 மடங்கும் கொடியதாகும். ஒரு மனிதனை கொல்ல 0.035 கிராம் ரெசின் போதும். ஒரு ஆமணக்கு விதை ஒரு குழந்தையை கொல்ல போதுமானதாகும். ஆனால் அதிஷ்ட வசமாக இந்த நஞ்சு எண்ணையில் கரையும் தன்மை இல்லாததாலும், நம் கிராமங்களில் ஆமணக்கு எண்ணெய் அடுப்பில் காய்ச்சி தயாரிக்கப் படுவதாலும், விளக்கெண்ணையில் இந்த நஞ்சு இருப்பதில்லை.

தற்போது இந்த நஞ்சு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும், புற்று நோய் மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தவும் உபயோகப் படுகிறது. ஆனால், துரதிஷ்ட வசமாக, முதலாம் உலகப் போரில் உபயோகிக்க இந்த நஞ்சு நிரம்பிய ரசாயன குண்டுகளை தயார் செய்தார்கள். இதன் மிக கொடிய அழிவு திறனை எண்ணி, நல்ல காலமாக அவைகளை உபயோகப் படுத்தவில்லை.

பயங்கரவாதமும், குடை குண்டும்


ரெசின் என்ற இந்த நஞ்சை, ஆமணக்கு செடி மற்றும் விதையிலிருந்து பிரித்து எடுத்து பொடியாக்கி (powder) காற்றில் தூவியோ, குடி தண்ணிரில் கலந்தோ அல்லது ஊசி மூலமாகவோ செலுத்தியோ மனித உயிர்களையும் மற்ற உயிரினங்களையும் சுலபமாக அழிக்க முடியும். இந்த நஞ்சுக்கு, முறிவு மருந்து (antidote) ஏதும் இல்லாததால், இந்த நஞ்சால் பாதிக்கபடுகின்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மிகக் கடினம். இப்போது இந்த நஞ்சை, பல தீவிரவாத இயக்கங்கள், உயிரியல் தீவிரவாத (Bioterrorism) நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துகிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் ஜியார்ஜி மார்கோவ் என்பவரின் கொலை. அரசின் கொள்கைகளுக்கு மாற்று கருத்து கொண்ட பல்கேரிய நாட்டின் பத்திரிக்கையாளர் ஜியார்ஜி மார்கோவ் (Georgi Markov) என்பவர். அவர் அந்நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வாழ்ந்து வந்தார். ரெசின் நஞ்சை கண்ணுக்கு தெரியாத சிறு குண்டுகளாக செய்து, குடை முனையில் அவற்றை வைத்து, பேருந்துக்காக காத்து நின்ற மார்கோவை, தற்செயலாக குடையால் இடிப்பது போல், காலில் குத்தி கொலை செய்தார்கள். இது நடந்தது 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் நாள். இந்நிகழ்வு பற்றி மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைப்பகுதிகளுக்கு செல்லவும்.


இதே போல 1980 ஆம் ஆண்டு, ஈரான், ஈராக் சண்டையில் இதை பயன்படுத்தியதாகவும், ஆப்கானிஸ்தானில் அல் குவைதாவினர் இருந்த குகைகளில் இருந்து இந்த நஞ்சு கண்டெடுக்கப் பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனாலும், மற்ற தாவரங்களுக்கு இல்லாத ஒரு தனித்தன்மை ஆமணக்கு செடிக்கு இருப்பதால், இந்த நஞ்சை முறிக்கவோ, இந்த நஞ்சால் பாதிப்பு வராமல் காக்கவோ, அல்லது வாழ்வு முறை மாற்றம் மூலம், இயற்கையிலேயே, உடலில் எதிர்ப்பாற்றலை நம்மால் உண்டாக்கவோ முடியும்.

அது பற்றி அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.




2 comments:

Anonymous said...

ஆமணக்கு செடி மற்றும் விதைகளில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம் தருகிறது உங்கள் கட்டுரை. இயற்கையின் பேராற்றலை கண்டு அதிசயிப்பதை தவிர வேறன்ன செய்ய முடியும். தங்களின் இது போன்ற அபூர்வமான தகவல்கள் எங்களுக்கு புதுசு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
கே. சிவசீலன்

Anonymous said...

தங்கள் கட்டுரை கால்நடை மருத்துவர்களுக்கு மட்டுமல்ல. விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மிகவும் பயன் தருகிறது. தங்கள் அனுபவங்களை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைக்க வேண்டும். அப்போதுதான் வெள்ளைக்காரர்களின் புத்தகங்களை மட்டுமே படித்து, பல நோய்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க இயலாமல் தடுமாறும் நிலை மாறும். கால்நடை பல்கலை கழகம் தங்கள் அனுபவங்களை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். செய்கிறார்களா தெரியவில்லை. தொடரட்டும் தங்கள் நற்பணி.

எஸ். சேஷாத்ரி

Post a Comment