Saturday, December 5, 2009

ஷெர்லக் ஹோம்ஸ்


ஒரு தவறான தகவலுக்கு மறுப்பு

சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம், இரு கொலைகள் என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அப்புத்தகம் ஆங்கிலத்தில் Arthur Conan Doyle என்ற மருத்துவர் எழுதியது. அதை பத்ரி சேஷாத்ரி என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அப்புத்தக அறிமுக பகுதியில் (பக்கம் 8-9) கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

"ஆர்தர் கோனன் டாயில் என்ற ஸ்காட்லாந்துகாரர், மருத்துவம் படித்தவர். மருத்துவராக பணியாற்றவும் செய்தார். ஆனால், அதில் அவருக்கு பெரிய திறமை இருந்திருக்க முடியாது. பெரிதாக சம்பதிக்கவுமில்லை. ஓய்வு நேரத்தில் அவர் இந்தக் கதைகளை எழுத ஆரம்பித்திருக்க வேண்டும்".

இந்த கருத்து Arthur Conan Doyle வாழ்க்கை வரலாறு பற்றி சரியாக தெரியாமல் எழுதபட்டிருக்கவேண்டும். ஒரு திறமையான மருத்துவருக்கு மிகவும் தேவையான நுட்பமாக கூர்ந்து கவனிக்கும் திறன் மிக அதிகமாக இருந்ததால்தான், Arthur Conan Doyle -யால் சிறந்த துப்பறியும் நாவல் எழுத முடிந்தது.

அவர் எடின்பர்க் மருத்துவ கல்லூரியில் படித்துகொண்டிருந்த போது, ஒரு நாள் டாக்டர் ஜோசப் பெல் (Dr. Joseph Bell) என்ற பேராசிரியர் மருத்துவமனையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

டாக்டர் ஜோசப் பெல், நோயாளிகள் உள்ளே வரும்போதே அவர்களை கூர்ந்து நோக்கி, அவர்களுடைய தொழில், முந்தைய கால வரலாறு போன்றவற்றை அவர்களை கேட்டறியாமலே, மிக சரியாக சொல்லும் திறன் பெற்றவர்.

அப்போது ஒரு நோயாளி, மருத்துவரை பார்க்க வந்தார். டாக்டர் ஜோசப் பெல், அந்நோயாளியை நோக்கி கேட்டார்
.
நீங்கள் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிதானே?

ஆம்.

உங்களுக்கு இடது கை பழக்கம் உள்ளதல்லவா?

ஆம்

சிறிது நேரம் காத்திருங்கள். மாணவர்களுக்கு பாடத்தை முடித்துவிட்டு வருகிறேன்.

என்றார்.

நோயாளி சென்று அமர்ந்தார்.

ஒரு மாணவனாக அங்கிருந்த Arthur Conan Doyle தமது ஆசிரியரான ஜோசப் பெல்லை பார்த்து,

இவரை உங்களுக்கு முன்பே தெரியுமா? என்று கேட்டார்.

நான் இவரை இதற்கு முன் பார்த்தது கூட இல்லை என்றார் பெல்.

இதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த Arthur Conan Doyle ,

பின் எப்படி அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதையும், அவருக்கு இடது கை பழக்கம் உண்டு என்பதையும் சொன்னீர்கள்

என்று கேட்டார்.

அதற்கு,

எந்த ஒரு நோயாளியையும் மருத்துவர் கூர்மையாக கவனித்தால், நோயாளி பற்றிய எல்லா விவரங்களையும் கூற முடியும்

என்று சொன்ன ஜோசப் பெல்

'Keen observation is the prime importance in Clinical Medicine' என்பது உனக்கு தெரியுமா?

என்று கேட்டுவிட்டு, தன்னால் எவ்வாறு கூற முடிந்தது என்று விளக்கினார்.

அந்நோயாளி, அணிந்துள்ள அரைக்கால் சட்டையில் இடது பக்க தொடை பகுதி மட்டும் தேய்மானத்தால் கிழிந்துள்ளது. ஆனால், சாதாரணமாக ஒரு மனிதனின் அரைக்கால் சட்டையில் உட்காரும் (புட்டம்) பகுதியில்தான் இரு பக்கமும் தேய்மானம் காரணமாக நைந்து, கிழிந்து இருக்கும். இவருக்கு ஒரு தொடையில் மட்டும் நைந்து கிழிந்து இருப்பதால், இவர் ஒரு தொடையை மட்டும் கீழே வைத்து, மற்றொரு காலை மடக்கி நிறுத்தி வைத்து வேலை செய்யும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருக்கவேண்டும். எல்லா செருப்பு தைக்கும் தொழிலாளிகளும் வலது தொடையை தரையில் வைத்து, இடது காலை மடக்கி நிறுத்தியும், வலது கையில் தோலை அடித்தும் தைப்பார்கள். இவர் இடது கை பழக்கம் உடையவராக இருப்பதால், இடது தொடையை மட்டும் தரையில் வைத்து வேலை செய்வதால், அவருடைய அரைக்கால் சட்டையில் இடது பக்கம் மட்டும் தேய்மானத்தால் கிழிந்துள்ளது. இதை கண்டறிந்து சொல்வதில் என்ன கடினம் இருக்கிறது?

என்றார் ஜோசப் பெல்.

அப்போது ஒரு மாணவன், தன்னுடைய பாக்கெட் வாட்சை (கை கடிகாரம் அல்ல) ஆசிரியரான ஜோசப் பெல் வசம் கொடுத்து,

இதை வைத்து ஏதாவது சொல்ல முடியுமா சார்?

என்றான்.

ஆசிரியரான ஜோசப் பெல் அந்த பாக்கெட் வாட்சை கூர்ந்து கவனித்தார். பிறகு அந்த மாணவனை நோக்கி

இந்த கடிகாரம் உன் தந்தையுடையது. நீ அவருக்கு இரண்டாவது மகனாக இருக்க வேண்டும். உனது மூத்த சகோதரர், சமீபத்தில் குடி பழக்கம் காரணமாக, மூப்பு எய்தும் முன்பே இறந்திருக்க வேண்டும்

என்றார்.

அந்த மாணவன் தொடங்கி, வகுப்பில் இருந்த அனைவருமே, ஆச்சரியத்தில் மூழ்கினர்.

காரணம், ஆசிரியரான ஜோசப் பெல் கூறியது, முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை.

உடனே, Arthur Conan Doyle

எப்படி உங்களால் இவ்வளவு சரியாக கூற முடிந்தது என்று கேட்க,

அதற்கு டாக்டர் பெல்

அதுதான் ஒரு சிறந்த மருத்துவனுடைய திறமை

என்று கூறி, தன்னால் எப்படி மேற்கண்ட விவரங்களை சொல்ல முடிந்தது என்று விவரிக்க ஆரம்பித்தார்.

இக்கடிகாரத்தில், கடிகாரம் உற்பத்தி செய்த வருடம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்பது உள்ளது. ஆகையால் இது புதிதாக வாங்கபட்டதல்ல. இது அவனுடைய தந்தை வாங்கியதாக இருக்கவேண்டும். இந்த மாணவன் தந்தை இல்லாதவன் என்பது இவனது கல்லூரி ரெக்கார்டுகளை நான் முன்பே பார்த்ததால் எனக்கு தெரியும். கடந்த வாரம் வரை, இவன் இந்த பாக்கெட் வாட்ச்சை அணிந்து வரவில்லை. கடந்த வாரம் இவன் சிறப்பு விடுப்பில் சென்று திரும்பினான். அதன் பிறகே இவன் சட்டையில் இந்த வாட்ச் இருந்தது. நம் நாட்டு சட்டப்படி, தந்தையின் பொருட்கள் மூத்த மகனுக்கு மட்டுமே சொந்தமாகும். முதல் மகன் இறந்தால்தான், இரண்டாம் மகன் அவற்றை பெற முடியும். ஆகையால்தான், போன வாரம் இவன் அண்ணன் இறந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தேன். இந்த வாட்ச்சை உன்னிப்பாக பார்த்தபோது, அதில், பல வட்டி கடைகளின் குறியீடுகள் இருந்தன. மருத்துவ கல்லூரியில் மகனை படிக்க வைக்கும் குடும்பத்தினர், இது போல வாட்ச்சை அடகு வைக்கும் அளவுக்கு ஏழையாக இருக்க முடியாது. ஏதோ ஒரு அவசர தேவைக்கு மட்டுமே இது போல வாட்ச்சை அடகு வைக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த வாட்ச் பல முறை அடகு வைக்கப்பட்டுள்ளது. மது அருந்துவது போன்ற கெட்ட பழக்க வழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இது போன்று வாட்ச்சை அடகு வைப்பார்கள். இந்த கடிகாரத்தின் சாவி கொடுக்கும் பகுதியை கவனித்த போது, அது முறையற்ற வகையில் அடிக்கடி சாவி கொடுக்க பட்டதன் காரணமாக சரியான தேய்மானம் இல்லை. குடி போதையில் உள்ளவர்கள்தான் இது போன்று சாவி கொடுப்பார்கள். ஆகவே, இந்த வாட்ச்சை அணிந்தவன் ஒரு மொடா குடியனாக இருந்து, அதன் காரணமாக இளம் வயதிலேயே இறந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தேன்.

என்று கூறி முடித்தார்.

இதை கேட்ட Arthur Conan Doyle உட்பட அவ்வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும், கூர்ந்து நோக்கும் திறன் மருத்துவ தொழிலுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தனர். இதன் பிறகு, டாக்டர் பெல்லை தன ஆதர்ஷ புருஷனாக பாவித்த Arthur Conan Doyle, எதையும் நுட்பமுடன் கூர்ந்து நோக்கும் திறனை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்

தனது மருத்துவ படிப்பை முடித்த பிறகு ஒரு மருத்துவராக பணியாற்றினார் Arthur Conan Doyle.தன்னிடம் வரும் நோயாளிகளை கூர்ந்து கவனித்து, அவர்களை பற்றிய பல ரகஸ்யங்களை அறிந்து, சிறப்பான முறையில் மருத்துவம் செய்ததோடு, சில குற்றவாளிகளான நோயாளிகளை பற்றி போலீசுக்கு துப்பும் கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு மருத்துவ தொழிலில் சிறிது தொய்வும் ஏற்பட்டது. அவருக்கு உலகம் சுற்றும் ஆர்வம் காரணமாக, அவரால் ஒரே இடத்தில் நிலையாக இருந்து மருத்துவம் செய்ய இயலவில்லை.

ஆரம்பத்தில் தன்னுடைய நண்பரான மருத்துவர் ஒருவருடன் இணைந்து மருத்துவ தொழில் செய்தார். ஆனால் அவருடைய நண்பர் மருத்துவ தொழில் தர்மத்தை மீறி, பல தவறான காரியங்களை ஈடு பட்டதால், அவருடன் கருத்துவேறுபாடு கொண்ட Arthur Conan Doyle அதன் பிறகு சுமார் பத்தாண்டுகள் தனியாகவே ஒரு மருத்துவராகவே தொழில் புரிந்தார்.

ஆயினும், Arthur Conan Doyle அடிப்படையில் ஒரு நல்ல எழுத்தாளராக இருந்த காரணத்தால், மருத்துவ தொழிலைவிட எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அதற்கு காரணம் அவருடைய அம்மா.

அப்பெண்மணி நிறைய புத்தகங்கள் படிப்பதோடு, நன்றாக கதை சொல்லும் திறன் பெற்றவர். தன்னுடைய மகனான Arthur Conan Doyle -க்கு சிறு வயதிலிருந்தே நிறைய கதைகளை சொல்லி, கதை சொல்லும் ஆற்றலை தன் மகனுக்கும் ஊட்டி வளர்த்தார்.

Arthur Conan Doyle தன் பள்ளி வயதிலேயே, சிறு கதைகள் எழுதி, பல பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆயின. அவர் மருத்துவ கல்லூரியில் படித்தபோதும், தன் சம கால புகழ் பெற்ற பல எழுத்தாளர்களை சந்தித்து, தன் எழுத்து ஆர்வத்தை வளர்த்துகொண்டார்.

ஒரு திறமையான மருத்துவராக இருந்த போதும், தனது ஓய்வு நேரங்களில் கதைகளை எழுதிய அவர், எழுத்தில் கொண்ட ஆர்வம் காரணமாகவே, முழு நேர எழுத்தாளராக மாறினார். இடையில் சில காலம் அரசியல் மற்றும் பொது வாழ்விலும் ஈடுபட்டார். அவர் மருத்துவராக பணி புரிந்த காலத்திலும், பல பிரபல கொலை வழக்குகளில் துப்பறிவதற்காக அழைக்கப்பட்டு, வெற்றிகரமாக துப்பு துலக்கினார்.

மருத்துவ துறைக்கு தேவைப்படும் கூர்ந்து நோக்கும் திறன் பெற்றிருந்த காரணத்தால்தான் Arthur Conan Doyle அவர்களால் ஒரு சிறந்த துப்பறியும் நாவலாசிரியராக முடிந்தது. உண்மையில் மருத்துவ துறை Arthur Conan Doyle என்ற ஒரு சிறந்த மருத்துவரை இழந்தது என்றாலும், ஒரு உலகப்புகழ் பெற்ற துப்பறியும் நாவலாசிரியர் நமக்குக் கிடைத்தார்.

தன் கல்லூரி நாட்களில் தன்னை மிகவும் கவர்ந்த டாக்டர் பெல்லை நினைவில் வைத்தே அவர் ஷெர்லக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் நிபுணர் கதா பாத்திரத்தை படைத்தார். இதை அவர் டாக்டர் பெல்லுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

"You are yourself Sherlock Holmes and well you know it,"

இவ்வளவு விஷயங்களை நான் எழுத காரணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம், இரு கொலைகள் என்ற புத்தகத்தின் அறிமுக பகுதியில் Arthur Conan Doyle ஒரு திறமையான மருத்துவராக இருந்திருக்க முடியாது என்று எழுதி இருப்பது சரியான மதிப்பீடு அல்ல என்பதை உணர்த்தவே.

ஒரு மருத்துவருக்கு கூர்ந்து நோக்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்பதை, விகடன் வெளியிட்டுள்ள போ ஸ்ட்மார்டம் என்ற டாக்டர் சேதுராமன் அவர்கள் எழுதிய புத்தகத்தை படித்தாலே விளங்கும்.

உலக புகழ் பெற்ற மனிதர்களை பற்றி எழுதும்போது, தவறான தகவல்கள் இடம்பெறாது பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் உணரவேண்டும் என்பதே என் விருப்பம்.