Friday, July 17, 2009

திரும்பிபர்ர்க்கிறேன்-4

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவ மனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் ஒரு குழந்தையின் கழுத்திலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கியதாக செய்தி தாள்களில் வந்த செய்தியை படித்திருப்பீர்கள். இது தவறானாலும், அந்த தொழிலாளியின் துணிவையும், திறமையையும் யாராலும் மறுக்க முடியாது. அவர் முறையாக மருத்துவம் பயிலா விட்டாலும், பல மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்யும் பொது உடன் இருந்து பார்த்து பழகியதால், அந்த தொழிலை துணிவுடன் அறுவை மருத்துவம் செய்துள்ளார். அதற்கும் ஒரு தனி திறமை தேவை. என்னுடைய பணிகாலத்திலும் இது போன்று நடந்த ஒரு நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திருவெண்காட்டில் என் நான்கு மாத பணிக்குப்பின் டிசம்பர் மாத மத்தியில் மாயவரம் (இன்றைய மயிலாடுதுறை) கால்நடை மருத்துவமனைக்கு மாற்றபட்டேன். அப்போது மாயவரம் கால்நடை மருத்துவமனை ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்தது. வீட்டின் முன் பகுதி மருத்துவமனையாகவும், பின் பகுதி மருத்துவரின் வீடாகவும் இருந்தது. இரவில் அவசர மருத்துவத்திற்கு வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவருக்கு உதவ ஒரு பணியாளர், மருத்துவமனையில் பணியில் இருப்பது உண்டு.

நான் மாயவரத்தில் பணியில் சேர்ந்த மறுநாள் இரவு இரண்டு மணிக்கு, இரவு பணியில் இருந்த பணியாள், என்னை எழுப்பி, 'வைதீஸ்வரன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பசு கன்று ஈன முடியாமல் தவிப்பதாகவும், உடனடியாக வந்து உதவுமாறும் வேண்டி ஒரு விவசாயி வந்துள்ளார்' என்று கூறினார்.

அப்போது கடும் குளிர். ஒரே இருட்டு வேறு. ஆகவே, வெகு தொலைவில் இருந்த அந்த கிராமத்துக்கு சென்று, திரும்புவது சிரமம் என்பதால், அந்த பசுவை ஒரு வண்டில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறவும் என்று சொன்னேன்.

அதற்கு, என் பணியாளர், அன்றைய என் வயதின் அளவை போல் இரு மடங்கு அனுபவம் கொண்டவர், 'உங்களை அழைத்து போக வாடகை காருடன் வந்துள்ளார். நானும் தேவையான எல்ல மருந்துகள் மற்றும் உபகரணங்களை தயாராக எடுத்து வைத்துள்ளேன். உடனடியாக சென்று வந்துவிடலாம் அய்யா' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

முதலில் தயங்கிய நான், பிறகு அந்த கடுங்குளிர் இரவில் அந்த கிராமத்துக்கு சென்று மருத்துவம் செய்ய முடிவெடுத்து, உடை மாற்ற தயார் ஆனேன். ஆனாலும் பலவித என்ன அலைகள் மனதில் தோன்றி என்னை குழப்பமடைய செய்தன.

மருத்துவர் என்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை செய்ய வேண்டும்தானே? அதுதானே மருத்துவர் கடமை. அதில் குழம்ப என்ன இருக்கிறது? என்றுதான் பொதுவாக யாருமே நினைப்பார்கள்.

ஆனால், மருத்துவம் செய்ய வெளியூர் செல்ல நான் தயங்கியதற்கு என்ன காரணம்? அன்றைய அரசு சட்ட திட்டங்கள் என்ன?
இவை குறித்து நான் அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, July 1, 2009

ஒட்டகம்
"எலும்பு தின்னும் ஒட்டகம்"

பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய பல செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனாலும், அவை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பல தமிழ் அறிஞர்கள், பண்டைய இலக்கியத்தில் விலங்குகள் குறித்து பாடப்பட்டுள்ள பாடல்களை ஆய்வு செய்து, அவை குறித்து விரிவாக எழுதி உள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டதக்கதாக இருந்தாலும், அவர்கள் தொழிலால் வேறுபட்டதினால், அவர்களுடைய விளக்கங்கள் கால்நடை மருத்துவ அறிவியல் உண்மைகளுக்கு மாறுபட்டவையாக உள்ளன.

உதாரணமாக, அகநானூறில் வரும் ஒரு பாடலில்

பாறைகளில் உலர்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டின் வெள்ளை எலும்புகளை தின்று ஒட்டகம் தன் பசியை தீர்த்து கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

"குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நடுங் கவலைய கானம் நீந்தி "(அகம் 345, 17-19)

இது பற்றி விளக்கம் அளித்த ஆசிரியர், ஒட்டகம் எலும்பை தின்பதாக புலவர் கூறி இருப்பது செவி வழி செய்தியாக தோன்றுகிறது. ஒட்டகம் எலும்பை தின்பது உண்மையன்று என்று எழுதி உள்ளார்.

அனால், கால்நடை மருத்துவ நோய் தீர்ப்பியல்படி, ஒட்டகம் எலும்பை தின்னும் என்பது உண்மையே. தனது உணவின் மூலம் போதுமான அளவு பாஸ்பரஸ் தாது சத்து கிடைக்காவிட்டால், ஒட்டகம் எலும்பை தின்று இக்குறையை போக்கி கொள்ளும் என்பது உண்மையே. இந்நோய் இன்றும் இந்தியாவில் ஒட்டகம் அதிகமுள்ள ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காணப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் , பிகானீரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் இயங்கும் ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் இந்நோய் பற்றிய பல ஆராய்ச்சிகள் செய்ய பட்டுள்ளன.

ஆகவே, பண்டைய தமிழ் புலவர்கள் ஒட்டகம் பற்றி பாடியுள்ள பாடல் அறிவியல் பூர்வமாக சரியானதே.

Image courtesy of
Answers in Genesis and the Creation Museum and reference
(http://www.answersingenesis.org/assets/images/articles/zoo/Camel.jpg)