Wednesday, October 7, 2009

திரும்பிப்பார்க்கிறேன் - 7

அங்கு சென்றபின்தான், அந்த விவசாயி கூறியது போல, அந்த பசு அன்று மாலையிலிருந்துதான் கன்று ஈன முடியாமல் தவிக்கிறது என்பது பொய் என்று தெரிய வந்தது. அந்த பசு கடந்த இரண்டு நாட்களாக கன்று ஈன முடியாமல் தவிப்பதோடு, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சில நாட்டு வைத்தியர்கள் வந்து கன்றை வெளியே எடுக்க முயற்சித்து, அது முடியாமல் திரும்பி விட்டனர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த கடுங்குளிர் இரவில், சட்டையை கழற்றிவிட்டு சுடுநீர் கிடைக்கததால், குளிர்ந்த நீரிலேயே கையை கழுவி, சோப்பு போட்டு, சிறிய லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனை செய்தபோது, திடுக்கிட்டேன். பசுவின் பிறப்பு உறுப்பினுள் என் சுண்டு விரல் நுழைய கூட இடமில்லை. கன்று இறந்து, அதன் கால்கள் உப்பி, பெருத்து இருந்தன. நாட்டு வைத்தியர்கள் முரட்டுத்தனமாக இழுத்ததால், இரண்டு முன்னங்கால்களும் கணுக்கால் வரை வெளியே நீட்டி கொண்டிருந்தன. தலை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. .


இது போன்ற கேஸ்களில், கால்களை வெட்டி எடுத்தால்தான், கை உள்ளே நுழைய இடம் கிடைக்கும் என்று படித்துள்ளேன். அவ்வாறு வெட்டி எடுப்பதற்கு Subcutaneous fetotomy என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இவ்வாறு வெட்டி எடுக்க தேவையான உபகரணமான உளி (Deburis Chisel) மற்றும் பிற உபகரணங்கள் கொண்ட பெட்டி (Thygesen embryotome) தேவைப்பட்டது. நான் கல்லூரியில் படிக்கும்போது, இந்த உபகரணம், கல்லுரியிலேயே கிடையாது. எனது கல்லூரி காலம் முடியும் தறுவாயில்தான், டென்மார்க் நாட்டுக்கு சென்று ஈனியல் மருத்துவத்தில் பயிற்சி பெற்று வந்த ஒரு விரிவுரையாளர், இந்த கருவிகளை உபயோகிப்பது எப்படி என்று கரும்பலகையில் படம் வரைந்து விளக்கியிருந்தார். அவருடைய முயற்சியால், இந்த கருவி மேலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சில முக்கிய மருத்துவமனைகளுக்கு மட்டும், அரசால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் மாயூரம் கால்நடை மருத்துவமனையும் ஒன்றாகும்.


நான் பொறுப்பேற்பதற்கு ஒரு மாதத்திற்குள் முன்தான், அந்த கருவி பெறப்பட்டு, பார்சல் வந்த சிப்பம் கூட உடைக்கப்படாமல் வைக்கபட்டிருந்தது. நான் பொறுப்பேற்கும்போது, மருத்துவமனை சாமான்களை சரி பார்க்கும்போதுதான், அந்த பெட்டியை பார்த்தேன். அதை அதுவரை யாரும் பிரித்துக்கூட பார்க்கவில்லை. மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கும் அதை பயன்படுத்தும் முறை தெரியாது. இந்த பெட்டியின் உபயோகம் தெரியாததால், எனது பணியாள் அந்த பெட்டியை எடுத்து வரவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினேன். திரும்பவும் மாயூரம் சென்று அந்த கருவியை எடுத்து வரவேண்டுமானால், அதற்குள் பொழுது விடிந்துவிடும். காலை பணிக்கு செல்ல முடியாது.


என்ன நீ இவ்வாறு செய்துவிட்டாய்? நீ எல்லா உபகரணங்களையும் எடுத்து வந்திருப்பாய் என நம்பி வந்தது எவ்வளவு தவறாக போய்விட்டது பார்? என்று எனது பணியாளை கடிந்துகொண்டேன்.


அதற்கு அந்த பணியாள் 'இல்லை அய்யா, நம்மிடமிருக்கும் கருவிகளை கொண்டே, கன்றை வெளியே எடுத்துவிடலாம்' என்று துணிவுடன் கூறினார். என்னுடைய புத்தக அறிவு, அந்த கருவியின்றி கன்றை வெளியே எடுக்க முடியாதே, என்ன செய்வது என்று யோசிக்க வைத்து.


ஆனால் எனது பணியாள் அந்த மாட்டின் சொந்த காரரை பார்த்து, 'மரத்தால் ஆன தயிர் கடையும் மத்தும் கூடவே ஒரு கொடுவாளும் உடனே வேணும். போய் எடுத்து வா' என்றார். மாட்டின் சொந்தகாரர் உடனே ஊருக்குள் சென்று, தயிர் கடையும் மர மத்து மற்றும் கொடுவாளுடன் வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்தையும் கொடுவாளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்தேன்.

- தொடரும்