செய் தக்க செய்யாமை யானுங் கெடும்
1960-ம் ஆண்டுகளில் செயற்கை முறை கால்நடை இன விருத்தி முறை மாநிலத்தின் எல்லா பகுதிகளுக்கும் விரிவு படுத்தப் படவில்லை. அதற்கு பதிலாக, பல அரசு கால்நடை மருத்துவமனைகளில் பொலி காளைகளை பராமரித்து, இயற்கை முறையில் இன விருத்தி செய்ய பொதுமக்களுக்கு உதவி வந்தார்கள். இப்பொலி காளைகளை பராமரிக்க, ஓரிரு பணியாளர்கள் (Bull Attendants) நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அரசு நிரந்தர பணியாளாக (permanent) கருதப் படமாட்டார்கள். அவர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வோ, ஓய்வூதியமோ மற்ற பிற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் மற்ற சலுகைகளோ கிடையாது. அவர்களை Contingent Menials என்று அழைப்பார்கள்.
அன்றைய கீழ் தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரி கால்நடை மருத்துவமனையில் 2 பொலி காளைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பராமரிக்கப் பட்டு வந்தது. அதில் ஒன்று முர்ரா எருமை இனத்தை சேர்ந்தது. அது மிகவும் முரடாக, யாருக்கும் அடங்காமல் இருந்தது. மேலும், அடிக்கடி பலரை முட்டும் குணம் கொண்டதாக இருந்தது. துரதிஷ்டவசமாக, ஒரு நாள் காலை அந்த எருமையை நடை பயிற்சிக்கு அழைத்து சென்ற பணியாளரின் வயிற்றில் அந்த எருமை முட்டியதில், அந்த பணியாளர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.
சாலையின் நடுவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், இது ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறிவிட்டது.
இறந்த பணியாளரின் உறவினர்களும், பொதுமக்களும் நஷ்ட ஈடு கேட்டும், இறுதி சடங்கு நடத்த பண உதவி கேட்டும், கால்நடை மருத்துவரை நெருக்கினார்கள். கால்நடை மருத்துவருக்கு, மருத்துவமனைக்கு தேவையான சிலவற்றை வாங்குவதற்காக முன்பணமாக அரசால் கொடுக்கப்பட்ட ஐந்து ரூபாயை செலவழிக்க மட்டுமே அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்த நிலையில், அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
அப்போது அங்கு கால்நடை மருத்துவராக பணியாற்றியவர் என் வகுப்பு தோழர். நாகபட்டினம் மாவட்ட கால்நடை அதிகாரிக்கு, நிலைமையை விளக்கி, தந்தி அனுப்பினார்.
மாவட்ட அதிகாரியிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. மாவட்ட அதிகாரி நேரிலும் வரவில்லை. ஏனெனில் அவருக்கும், இது போன்ற நேரங்களில் செலவு செய்யவோ, வேறு உதவிகள் செய்யவோ எந்த அதிகாரமும் அரசால் வழங்கப் படவில்லை.
ஒரு வாரம் கழித்து மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவர்களுக்கும், மாவட்ட அதிகாரியிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில்,
“எல்லா கால்நடை மருத்துவர்களும், பணியாளர்களும், பொலி காளைகளின் நண்பர்கள் என்று அவை அறியும் வகையில் நடந்து கொள்ளவேண்டும்”
என்று அறிவுறுத்தப் பட்டிருந்தது.
அந்த மாத முடிவில் மாவட்ட அதிகாரி தலைமையில் நடந்த கால்நடை மருத்துவர்களின் கூட்டத்தில் இதுபற்றி பேச்சு வந்தது. அந்த பொலிகாளையை உடனடியாக கொரடாச்சேரியில் இருந்து திரும்பப் பெற வேண்டி இயக்குனருக்கு உடனடியாக கடிதம் எழுதுங்கள் என்று பலரும் கேட்டார்கள்.
ஆனால் இயக்குனருக்கு கடிதம் எழுத பயந்த மாவட்ட அதிகாரி, மறுத்தார். மாவட்ட கால்நடை அதிகாரியின் இந்த செய்கையை மறுத்துப் பேச யாருக்கும் துணிவில்லை.
இதைக் கண்ட எனக்கு சற்று கோபம் வந்தது. உடனே எழுந்து, கொரடாச்சேரி கால்நடை மருத்துவரை நோக்கி கீழ்கண்டவாறு கூறினேன்.
“இந்த வார இறுதியில் முதலமைச்சர் கொரடாச்சேரி வருவதாக செய்தி படித்தேன். அப்படி அவர் வரும்போது அந்த முர்ரா பொலிகாளையை, அவிழ்த்து தெருவில் விட்டுவிடுங்கள். அப்போதுதான் அது ஆட்களை கொல்லும் பொலிகாளை என்பது போலீசுக்கும் பொதுமக்களுக்கும் தெரிய வரும். அதனால் ஏற்படும் சட்ட - ஒழுங்கு பிரச்சினையை சரி செய்ய, போலீசார் பொலிகாளையை சுட்டு, சரிசெய்வார்கள். பிறகு போஸ்ட்மார்டம் செய்து மாவட்ட அதிகாரிக்கு செய்தி அனுப்பிவிடுங்கள். இவ்வாறுதான் இப்பிரச்சினையை முடிக்க முடியும்” என்று கூறினேன்.
உடனே மாவட்ட அதிகாரி, எனக்கு பயிற்சி அளித்த மூத்த அதிகாரியை நோக்கி,“நீங்கள் இப்படிதான் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளீர்களா?”
என்று கோபமாக கூறி, கூட்டத்தை முடித்துச் சென்றுவிட்டார்.
எனக்கு பயிற்சி அளித்த மூத்த கால்நடை மருத்துவரோ,
'இளங்கன்று பயமறியாது' என்று கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில், பொலிகாளை பிரச்சினை குறித்து பொதுமக்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுத்து, இயக்குனர் அந்த முர்ரா பொலிகாளையை ஒரத்தநாடு கால்நடை பண்ணைக்கு திரும்ப பெறுமாறு உத்தரவு இட்டார்.
ஒரு ஆண்டு சென்ற பின், அதே முர்ரா பொலிகாளையை மேல்தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரு நாள், தஞ்சாவூர் - திருவாரூர் நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த வாய்காலுக்கு, காளையை குளிப்பாட்டுவதற்காக கொண்டு சென்ற பொது, அந்த முர்ரா பொலிகாளை, பணியாளுக்கு அடங்காமல், கயிற்றை அறுத்துக்கொண்டு, பணியாளை முட்ட வந்துள்ளது.
இந்த பொலிகாளையின் வீர வரலாறு குறித்து தெரிந்து வைத்திருந்த பணியாள், அதனிடமிருந்து தப்பித்து, வாய்க்கால் கரையின் மீது ஓட, இந்த பொலிகாளையும் அவரை துரத்திக்கொண்டே ஓட, தப்பிக்க வழியின்றி பணியாள் வாய்க்காலில் குதித்து, நீந்தி உள்ளார்.
அவர் கரை ஏற, எந்த பக்கம் ஒதுங்கினாலும், அந்த பணியாளை கரை ஏற விடாமல், பொலிகாளை, கரையின் மீது ஓடி முட்ட முயன்றுள்ளது.
தஞ்சை - திருவாரூர் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நிகழ்வு நடந்ததால், இதை பார்க்க, மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
அந்த சமயம் அவ்வழியே ஜீப்பில் வந்த தஞ்சையை சேர்ந்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரி அந்நிகழ்வைக் கண்டு,
அந்த பணியாளரின் உயிரைக் காக்க வேண்டி, தன் கைத்துப்பாக்கியால், அந்த முர்ரா பொலிகாளையை சுட்டுக் கொன்றார்.
பணியாளின் உயிரை தக்க சமயத்தில் காத்ததற்காக, அவருக்கு அவ்வாண்டுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. பின்னாளில் அந்த ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழகத்தின் டி.ஜி.பி. யாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கொரடாச்சேரி நிகழ்ச்சிக்கு நடந்த உடனேயே அரசே அந்த முர்ரா காளையை செயற்கை முறையில் கொன்றிருக்க வேண்டும். அகிம்சை மற்றும் ஜீவகாருண்யம் மீது அபார நம்பிக்கை கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் அதனையே போதித்த மகாத்மா காந்தி கூட, மக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெருநாய்களை சுட்டுக் கொல்வதே சிறந்தது என்று கூறினார்.
ஆனால், அப்போதைய கால்நடை துறை மேல் அதிகாரிகள் தேவையின்றி பயந்து, தங்கள் கடமையை செய்யாத காரணத்தால், அந்த முர்ரா பொலி காளை காவல் துறை அதிகாரியின் துப்பாக்கிக்கு பலியானது.
அரசும், அதிகாரிகளும் மக்களுக்காகவே. எனவே, எந்த பிரச்சினை என்றாலும், சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்து பிரச்சினையை முளையிலேயே தீர்க்க வேண்டும். சுயநலம் அல்லது பயம் காரணமாக பிரச்சினைகளை தள்ளிப்போடுவது மிகவும் தவறு.
" செய்தக்க செய்யாமை யானுங் கெடும் "
என்ற வான்புகழ் வள்ளுவர் வாக்கு எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு இந்த பொலிகாளை நிகழ்ச்சி ஒரு உதாரணம்.