Wednesday, October 7, 2009

திரும்பிப்பார்க்கிறேன் - 7

அங்கு சென்றபின்தான், அந்த விவசாயி கூறியது போல, அந்த பசு அன்று மாலையிலிருந்துதான் கன்று ஈன முடியாமல் தவிக்கிறது என்பது பொய் என்று தெரிய வந்தது. அந்த பசு கடந்த இரண்டு நாட்களாக கன்று ஈன முடியாமல் தவிப்பதோடு, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சில நாட்டு வைத்தியர்கள் வந்து கன்றை வெளியே எடுக்க முயற்சித்து, அது முடியாமல் திரும்பி விட்டனர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த கடுங்குளிர் இரவில், சட்டையை கழற்றிவிட்டு சுடுநீர் கிடைக்கததால், குளிர்ந்த நீரிலேயே கையை கழுவி, சோப்பு போட்டு, சிறிய லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனை செய்தபோது, திடுக்கிட்டேன். பசுவின் பிறப்பு உறுப்பினுள் என் சுண்டு விரல் நுழைய கூட இடமில்லை. கன்று இறந்து, அதன் கால்கள் உப்பி, பெருத்து இருந்தன. நாட்டு வைத்தியர்கள் முரட்டுத்தனமாக இழுத்ததால், இரண்டு முன்னங்கால்களும் கணுக்கால் வரை வெளியே நீட்டி கொண்டிருந்தன. தலை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. .


இது போன்ற கேஸ்களில், கால்களை வெட்டி எடுத்தால்தான், கை உள்ளே நுழைய இடம் கிடைக்கும் என்று படித்துள்ளேன். அவ்வாறு வெட்டி எடுப்பதற்கு Subcutaneous fetotomy என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இவ்வாறு வெட்டி எடுக்க தேவையான உபகரணமான உளி (Deburis Chisel) மற்றும் பிற உபகரணங்கள் கொண்ட பெட்டி (Thygesen embryotome) தேவைப்பட்டது. நான் கல்லூரியில் படிக்கும்போது, இந்த உபகரணம், கல்லுரியிலேயே கிடையாது. எனது கல்லூரி காலம் முடியும் தறுவாயில்தான், டென்மார்க் நாட்டுக்கு சென்று ஈனியல் மருத்துவத்தில் பயிற்சி பெற்று வந்த ஒரு விரிவுரையாளர், இந்த கருவிகளை உபயோகிப்பது எப்படி என்று கரும்பலகையில் படம் வரைந்து விளக்கியிருந்தார். அவருடைய முயற்சியால், இந்த கருவி மேலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சில முக்கிய மருத்துவமனைகளுக்கு மட்டும், அரசால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் மாயூரம் கால்நடை மருத்துவமனையும் ஒன்றாகும்.


நான் பொறுப்பேற்பதற்கு ஒரு மாதத்திற்குள் முன்தான், அந்த கருவி பெறப்பட்டு, பார்சல் வந்த சிப்பம் கூட உடைக்கப்படாமல் வைக்கபட்டிருந்தது. நான் பொறுப்பேற்கும்போது, மருத்துவமனை சாமான்களை சரி பார்க்கும்போதுதான், அந்த பெட்டியை பார்த்தேன். அதை அதுவரை யாரும் பிரித்துக்கூட பார்க்கவில்லை. மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கும் அதை பயன்படுத்தும் முறை தெரியாது. இந்த பெட்டியின் உபயோகம் தெரியாததால், எனது பணியாள் அந்த பெட்டியை எடுத்து வரவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினேன். திரும்பவும் மாயூரம் சென்று அந்த கருவியை எடுத்து வரவேண்டுமானால், அதற்குள் பொழுது விடிந்துவிடும். காலை பணிக்கு செல்ல முடியாது.


என்ன நீ இவ்வாறு செய்துவிட்டாய்? நீ எல்லா உபகரணங்களையும் எடுத்து வந்திருப்பாய் என நம்பி வந்தது எவ்வளவு தவறாக போய்விட்டது பார்? என்று எனது பணியாளை கடிந்துகொண்டேன்.


அதற்கு அந்த பணியாள் 'இல்லை அய்யா, நம்மிடமிருக்கும் கருவிகளை கொண்டே, கன்றை வெளியே எடுத்துவிடலாம்' என்று துணிவுடன் கூறினார். என்னுடைய புத்தக அறிவு, அந்த கருவியின்றி கன்றை வெளியே எடுக்க முடியாதே, என்ன செய்வது என்று யோசிக்க வைத்து.


ஆனால் எனது பணியாள் அந்த மாட்டின் சொந்த காரரை பார்த்து, 'மரத்தால் ஆன தயிர் கடையும் மத்தும் கூடவே ஒரு கொடுவாளும் உடனே வேணும். போய் எடுத்து வா' என்றார். மாட்டின் சொந்தகாரர் உடனே ஊருக்குள் சென்று, தயிர் கடையும் மர மத்து மற்றும் கொடுவாளுடன் வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்தையும் கொடுவாளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்தேன்.

- தொடரும்

Monday, September 21, 2009

திரும்பிப்பார்க்கிறேன் - 6

ஏழை விவசாயியின் தவிப்பையும், பணியாளரின் விருப்பையும் அறிந்த நான், தொலை தூரத்தில் உள்ள அக் கிராமத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அவ்விவசாயியிடம் விசாரித்தபோது, மாலையில் மேய சென்ற பசு வயல் வெளியிலேயே கன்று போட முடியாமல் தவித்து, படுத்து கிடப்பதாகவும், கன்றின் இரண்டு கால்கள் மட்டும் வெளியே வந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதான் அப்பசுவுக்கு தலை பிரசவம் (முதல் பிரசவம்) என்றும் கூறினார்.


மேற்கண்ட விவரங்களை கேட்டறிந்த நான், அந்த கடுங்குளிர் இரவில், எனது பணியாளருடன், பதற்றத்துடன் மகிழ்வுந்தில் (காரில்) பயணித்தேன். எனது பதற்றத்துக்கு முக்கிய காரணம், எனது பணியில் நான் பார்க்கபோகும் முதல் பிரசவ கேஸ் இதுதான் என்பதே.


அது மட்டுமின்றி, எனது கல்லூரி பயிற்சி காலத்தில், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில், பிரசவ வேதனையோடு மருத்துவ உதவி கேட்டு ஒரு பசு கூட கொண்டுவரப்படவில்லை.


சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நான் பயின்ற காலத்தில் நோயுற்ற குதிரைகளும், நாய்களுமே அதிகம் வரும். பார வண்டி இழுக்கும் ஒரு சில காளை மாடுகள் மட்டுமே கழுத்து புண், வயிறு உப்புசம் மற்றும் கொம்பு முறிவு போன்றவற்றுக்காக சிகிச்சைக்கு கொண்டு வரப்படும். பசுக்கள் மற்றும் எருமை மாடுகளின் வருகை மிகக் குறைவே. ஆகவே, அந்நாட்களில் பயின்ற கால்நடை மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்று, கால்நடை துறையில் பணியில் சேர்ந்த பிறகுதான் மாட்டின சிகிச்சையில் (Bovine practice) அனுபவம் பெற முடியும்.


சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், இப்போது இருப்பது போல, பெரிய பிராணிகள் மற்றும் சிறிய பிராணிகள் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஈனியல் பிரிவு என்று பல சிறப்பு மருத்துவ பிரிவுகள் கிடையாது. அதற்கு பதிலாக குதிரை பிரிவு, நாய்கள் பிரிவு, மாடுகள் பிரிவு என்று மூன்று பிரிவுகள் மட்டுமே இருந்தன.

தேவையான அறுவை மருத்துவம், பிரசவ இடர்பாடுகள் யாவும் ஒன்றாகவே, அந்தந்த பிராணிகள் பிரிவுகளிலேயே மருத்துவம் செய்யப்படும். இப்போது இருப்பது போல, பல பிரிவுகளிலும் சிறப்பு தேர்ச்சி (Specialist) பெற்ற மருத்துவர்கள் கிடையாது. அறுவை சிகிச்சை துறை தவிர, மற்ற அனைத்து சிகிச்சைகளையும் பொது மருத்துவர்களே செய்தனர்.


நான் படிக்கும்போது பாட திட்டங்களும் இன்றிருப்பது போல அறுவை மருத்துவமும் ஈனியல் மருத்துவமும் தனித்தனி பாடங்களாக இல்லை. அறுவை சிகிச்சையும், பிரசவ சிகிச்சை முறைகளும், அறுவை சிகிச்சை பிரிவிலேயே ஒன்றாக பாடம் நடத்தப்பட்டு, தேர்வும் நடத்தப்படும். அப்போது ஈனியல் மருத்துவத்தில் செய்முறை பயிற்சிகளைவிட (practical) ஏட்டு படிப்புக்கே (Theory) முக்கியத்துவம் இருந்தது.

1959-க்குப் பின் தான் அறுவை சிகிச்சை துறையும், ஈனியல் துறையும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பயிற்சியும், தேர்வும், தனித்தனியாக நடத்தப்பட்டன. ஈனியல் துறை என்ற தனி துறை இல்லாததால், பிரசவ கேஸ்களின் வருகையும் மிகக்குறைவே. மாணவர்களுக்கு பிரசவ இடர்பாடுகளை நீக்கும் மருத்துவ முறை பற்றி புத்தக அறிவு (Theoretical) உண்டே தவிர, செயல்முறை அனுபவ அறிவு அதிகமில்லை. இன்றிப்பது போல, கல்லூரியிலும் பிரசவ இடர்பாடுகளை நீக்கும் முறைகளை பயிற்றுவிக்கும் பாந்தம் (Phantom) பெட்டிகள் கிடையாது.

இந்த நினைவுகளோடு, அந்த குளிர் இரவில், எப்படி அந்த பசுவின் இடர் நீக்கி, மருத்துவம் செய்வது என்றெண்ணியே பதட்டத்துடன் பயணித்தேன்.

சுமார் 30 நிமிட பயணத்துக்குப்பின் வைத்தீஸ்வரன்கோவிலை அடைவதற்கு முன், இருண்ட வயல்வெளிக்கு அருகில் நாங்கள் சென்ற மகிழ்வுந்து நின்றது. அங்கு நின்றிருந்த ஒருவர் கையிலிருந்த லாந்தர் விளக்கை ஆட்டினார். அதோ அங்குதான் அந்த பசுமாடு படுத்திருக்கிறது என்றார் .


மகிழ்வுந்தில் இருந்துஇறங்கிய நானும், என்பணியாளரும், 3 - 4 வரப்புகளை தாண்டி, பசுவிடம் சென்றோம். அங்கு கையில் லாந்தர்விளக்குடன்மேலும் இரண்டு பேர் காவலுக்கு நின்றிந்தனர்.




Wednesday, September 2, 2009

திரும்பிபார்க்கிறேன்- 5

அந்நாட்களில் அரசு சட்ட திட்டங்கள் மிக கடுமையானவை. அரை நாள் தற்செயல் விடுப்பு எடுக்க வேண்டுமானாலும், மாவட்ட அதிகாரிக்கு மனு செய்து, அவர் மாற்று ஏற்பாடாக வேறு ஒருவரை அனுப்பி, அவர் வந்து பதவி ஏற்றபின் தான் விடுப்பில் செல்ல முடியும். அது போல மருத்துவமனைக்கும் வேலை நேரததில் ( திங்கள் முதல் சனி வரை - காலை 8 மணி முதல் 12 மணி மணி வரை, மாலை 3 முதல் 5 வரை, ஞாயிறு, காலை 8 முதல் 12 வரை) எக்காரணம் கொண்டும் தாமதமாக வரவோ, அல்லது மருத்துவமனை மூட வேண்டிய நேரத்திற்கு முன்னதாகவோ செல்ல முடியாது. எவ்வளவு அவசரமானாலும், மருத்துவமனை நேரத்தில், மருத்துவமனையை விட்டு சொந்த வேலைக்காகவோ, வெளியில் மருத்துவம் செய்யவோ போகமுடியாது. அவ்வாறு யாராவது வெளியே சென்றிருக்கும் போது, மேலதிகாரிகள் வந்துவிட்டால் கால்நடை மருத்துவரின் பாடு திண்டாட்டமே. எங்கள் மாவட்டத்திலேயே ஒரு கால்நடை மருத்துவர் பஞ்சாயத்து போர்டு மாட்டிற்கு (Conservancy Bullock ) வைத்தியம் செய்துவிட்டு பிற்பகல் பணிக்கு மதியம் 3.05 க்கு வந்ததற்காக தண்டிக்கப்பட்டார்.

மாயவரத்தில் நான் பணியில் இருந்தபோது தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை முனிசிபல் ஆட்டு இறைச்சி அறுவை கூடத்தை (Slaughter House) மேற்பார்வை இடவேண்டும். பிறகு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மருத்துவ பணிகளை கவனிக்க வேண்டும். காலை 6 மணிக்கு சென்று, இறைச்சிக்காக கசாப்பு கடைக்காரர்கள் கொண்டு வரும் ஆடுகளை சோதனை செய்து, இறைச்சிக்கு தகுதியான ஆடுகளின் வாலில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும். அவ்வாறு அரக்கு முத்திரை வைக்கப்பட்ட ஆடுகளை மட்டுமே அறுவை கூடத்திற்குள் அனுமதிப்பார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் சில நிமிடங்கள் தாமதமாக போனால்கூட, கசாப்பு கடைக்காரர்கள் அதை பெரிது படுத்திவிடுவார்கள். காரணம் அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படும்.

அது மட்டுமின்றி மருத்துவமனையில் பணி புரியும் கால்நடை மருத்துவர், வீடுகளுக்கு சென்று வைத்தியம் செய்வது என்பது அவர்கள் சொந்த விருப்பை பொருத்தது. அது சட்டப்படி அவர்களின் கடமை அல்ல. ஆகையால் மருத்துவ
பணி நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியே சென்று வைத்தியம் செய்யக்கூடாது. மருத்துவமனை பணி நேரம் தவிர, பிற நேரங்களில் கால்நடை மருத்துவர் எங்கு வேண்டுமானாலும் சென்று வைத்தியம் செய்யலாம். அதற்காக அவர் கேட்கும் கட்டணத்தை கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவருக்கு கொடுக்க வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகளில் கூட முற்றிலும் இலவச சேவை கிடையாது. மாதம் 100ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சேவை. அவர்கள் கூட சினை பார்க்க 50 பைசா கட்ட வேண்டும். மற்றவர்களுக்கு கட்டண சேவைதான்.

கன்று போட முடியாமல் தவிக்கும் பிராணிகளுக்கு வைத்தியம் செய்யும்போது யாரலும் எவ்வளவு நேரத்திறககுள செய்து முடிக்க முடியும் என்று கூறமுடியது. ஆகையால், காலை 6 மணிக்குள் வைத்தியம் செய்து திரும்பி வேலைக்கு திரும்பமுடியுமா என்று யோசித்தேன். இது போன்ற காரணங்களால்தான் நான் அந்த நள்ளிரவு நேரத்தில் தொலை தூரத்தில் உள்ள கிராமத்துக்கு வைத்தியம் செய்ய செல்வதற்கு தயங்கினேன்.
.

Friday, July 17, 2009

திரும்பிபர்ர்க்கிறேன்-4

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவ மனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் ஒரு குழந்தையின் கழுத்திலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கியதாக செய்தி தாள்களில் வந்த செய்தியை படித்திருப்பீர்கள். இது தவறானாலும், அந்த தொழிலாளியின் துணிவையும், திறமையையும் யாராலும் மறுக்க முடியாது. அவர் முறையாக மருத்துவம் பயிலா விட்டாலும், பல மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்யும் பொது உடன் இருந்து பார்த்து பழகியதால், அந்த தொழிலை துணிவுடன் அறுவை மருத்துவம் செய்துள்ளார். அதற்கும் ஒரு தனி திறமை தேவை. என்னுடைய பணிகாலத்திலும் இது போன்று நடந்த ஒரு நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திருவெண்காட்டில் என் நான்கு மாத பணிக்குப்பின் டிசம்பர் மாத மத்தியில் மாயவரம் (இன்றைய மயிலாடுதுறை) கால்நடை மருத்துவமனைக்கு மாற்றபட்டேன். அப்போது மாயவரம் கால்நடை மருத்துவமனை ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்தது. வீட்டின் முன் பகுதி மருத்துவமனையாகவும், பின் பகுதி மருத்துவரின் வீடாகவும் இருந்தது. இரவில் அவசர மருத்துவத்திற்கு வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவருக்கு உதவ ஒரு பணியாளர், மருத்துவமனையில் பணியில் இருப்பது உண்டு.

நான் மாயவரத்தில் பணியில் சேர்ந்த மறுநாள் இரவு இரண்டு மணிக்கு, இரவு பணியில் இருந்த பணியாள், என்னை எழுப்பி, 'வைதீஸ்வரன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பசு கன்று ஈன முடியாமல் தவிப்பதாகவும், உடனடியாக வந்து உதவுமாறும் வேண்டி ஒரு விவசாயி வந்துள்ளார்' என்று கூறினார்.

அப்போது கடும் குளிர். ஒரே இருட்டு வேறு. ஆகவே, வெகு தொலைவில் இருந்த அந்த கிராமத்துக்கு சென்று, திரும்புவது சிரமம் என்பதால், அந்த பசுவை ஒரு வண்டில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறவும் என்று சொன்னேன்.

அதற்கு, என் பணியாளர், அன்றைய என் வயதின் அளவை போல் இரு மடங்கு அனுபவம் கொண்டவர், 'உங்களை அழைத்து போக வாடகை காருடன் வந்துள்ளார். நானும் தேவையான எல்ல மருந்துகள் மற்றும் உபகரணங்களை தயாராக எடுத்து வைத்துள்ளேன். உடனடியாக சென்று வந்துவிடலாம் அய்யா' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

முதலில் தயங்கிய நான், பிறகு அந்த கடுங்குளிர் இரவில் அந்த கிராமத்துக்கு சென்று மருத்துவம் செய்ய முடிவெடுத்து, உடை மாற்ற தயார் ஆனேன். ஆனாலும் பலவித என்ன அலைகள் மனதில் தோன்றி என்னை குழப்பமடைய செய்தன.

மருத்துவர் என்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை செய்ய வேண்டும்தானே? அதுதானே மருத்துவர் கடமை. அதில் குழம்ப என்ன இருக்கிறது? என்றுதான் பொதுவாக யாருமே நினைப்பார்கள்.

ஆனால், மருத்துவம் செய்ய வெளியூர் செல்ல நான் தயங்கியதற்கு என்ன காரணம்? அன்றைய அரசு சட்ட திட்டங்கள் என்ன?
இவை குறித்து நான் அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, July 1, 2009

ஒட்டகம்




"எலும்பு தின்னும் ஒட்டகம்"

பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய பல செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனாலும், அவை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பல தமிழ் அறிஞர்கள், பண்டைய இலக்கியத்தில் விலங்குகள் குறித்து பாடப்பட்டுள்ள பாடல்களை ஆய்வு செய்து, அவை குறித்து விரிவாக எழுதி உள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டதக்கதாக இருந்தாலும், அவர்கள் தொழிலால் வேறுபட்டதினால், அவர்களுடைய விளக்கங்கள் கால்நடை மருத்துவ அறிவியல் உண்மைகளுக்கு மாறுபட்டவையாக உள்ளன.

உதாரணமாக, அகநானூறில் வரும் ஒரு பாடலில்

பாறைகளில் உலர்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டின் வெள்ளை எலும்புகளை தின்று ஒட்டகம் தன் பசியை தீர்த்து கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

"குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நடுங் கவலைய கானம் நீந்தி "(அகம் 345, 17-19)

இது பற்றி விளக்கம் அளித்த ஆசிரியர், ஒட்டகம் எலும்பை தின்பதாக புலவர் கூறி இருப்பது செவி வழி செய்தியாக தோன்றுகிறது. ஒட்டகம் எலும்பை தின்பது உண்மையன்று என்று எழுதி உள்ளார்.

அனால், கால்நடை மருத்துவ நோய் தீர்ப்பியல்படி, ஒட்டகம் எலும்பை தின்னும் என்பது உண்மையே. தனது உணவின் மூலம் போதுமான அளவு பாஸ்பரஸ் தாது சத்து கிடைக்காவிட்டால், ஒட்டகம் எலும்பை தின்று இக்குறையை போக்கி கொள்ளும் என்பது உண்மையே. இந்நோய் இன்றும் இந்தியாவில் ஒட்டகம் அதிகமுள்ள ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காணப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் , பிகானீரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் இயங்கும் ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் இந்நோய் பற்றிய பல ஆராய்ச்சிகள் செய்ய பட்டுள்ளன.

ஆகவே, பண்டைய தமிழ் புலவர்கள் ஒட்டகம் பற்றி பாடியுள்ள பாடல் அறிவியல் பூர்வமாக சரியானதே.

Image courtesy of
Answers in Genesis and the Creation Museum and reference
(http://www.answersingenesis.org/assets/images/articles/zoo/Camel.jpg)

Friday, May 29, 2009

திரும்பிப் பார்க்கிறேன்-3

"இயற்கை தாய் அளித்துள்ள தற்காப்புத் திறன் "

எல்லா உயிரினங்களுக்கும், தங்கள் உடலில் நோய்களை தோற்றுவிக்கும் நுண்ணுயிர்கள் (Bacteria) மற்றும் நச்சுயிரிகளுக்கு (Virus) எதிராக மட்டுமே நோய் எதிர்ப்பு புரதத்தை (Antibodies) உடலில் உற்பத்தி செய்து தங்களை காத்து கொள்ள முடியும்.

ஆனால், தாவரங்களின் நஞ்சுகளுக்கு எதிராக, எந்த உயிரினத்தாலும் நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் உற்பத்தி செய்து, சாவிலிருந்து தன்னை காத்து கொள்ள முடியாது. இந்த நியதிக்கு, விதி விலக்காக, மூன்று தாவரங்களின் நஞ்சுகளுக்கு எதிராக மட்டுமே மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு புரதத்தை உற்பத்தி செய்ய, இயற்கை வழி வகுத்துள்ளது.

அந்த மூன்று தாவரங்களில் ஆமணக்கும் ஒன்றாகும்.

மற்ற மாவட்ட விவசாயிகள் போல, காவிரியின் கடை மடை பகுதியிலுள்ள விவசாயிகள் ஆமணக்கை பணப் பயிராக பயிரிடுவதில்லை. அனால், சிலர் ஓரிரு செடிகளை மட்டும் தங்கள் தோட்டங்களில் வளர்ப்பது அல்லது வளர விடுவது உண்டு.

புஞ்சை பயிர் அதிகம் பயிராகும் வானம் பார்த்த பூமியை கொண்டுள்ள மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ஆமணக்கு செடிகளை தங்கள் நிலத்தை சுற்றி, வரப்பு ஓரங்களில், இலாப நோக்கோடு பயிரிடுவார்கள். ஆமணக்கு இலைகளில் ரெசின் என்ற நஞ்சு அதிக அளவில் இருக்கும் என்பதை நாம் முன்பே கண்டோம். ஆகவே, நிலத்தில் உள்ள பயிர்களை அழிக்க வரும் பூச்சிகள், வரப்பு ஓரம் உள்ள ஆமணக்கு இலைகளை முதலில் தின்று, இறந்துவிடுவதால், நிலத்தில் பயிரிடப்படும் மற் பயிர்கள், பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றன. இந்த இயற்கை முறை விவசாயத்தால், உயிர்கொல்லி (Pesticide) மருந்துக்கு செலவு செய்யாமலே, விவசாயிகள் அதிக இலாபம் ஈட்ட முடியும்.

எங்கள் மாவட்டத்தில் (தென்னார்க்காடு) இந்த இயற்கை முறை விவசாயத்தை அப்போது எல்லோரும் கடை பிடித்தார்கள். இந்த நிலங்களில் மேய வரும் ஆடுகள் முதலில் வரப்பு ஓரங்களில் ஓரிரு ஆமணக்கு இலைகளை தின்ற உடனேயே, காவலில் இருப்போரால் விரட்டி அடிக்கப்படும். அதனால், அவை அதிக அளவு இலைகளை உண்ணும் வாய்ப்பை இழப்பதால், அவை இறந்து விடாமல் தப்பித்துவிடும். அதே நேரத்தில் சிறிது அளவு இலைகளை தின்ற ஆட்டின் உடலில் ரெசின் நஞ்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பு புரதம் உற்பத்தியாகிறது. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நேர்வதால், எண்கள் பகுதியில் உள்ள ஆடுகளின் உடலில் தேவையான அளவு ரெசின் நஞ்சை முறிக்கும் எதிர் புரதம் உற்பத்தி ஆவதால், அதிக இலைகளை தின்ன நேர்ந்தாலும், ஆடுகள் இறந்து விடாமல் இயற்கை காப்பாற்றுகிறது.

ஆமணக்கை பயிரிடாத, காவிரி கடைமடை பகுதியில் வாழும் ஆடுகளுக்கு, ஆமணக்கு இலையை தின்னும் வாய்ப்பு இருப்பதில்லை. ஆகையால், அவற்றின் உடலில் ரெசின் நஞ்சை முறிக்கும் நோய் எதிர்ப்பு புரதம் இயற்கையில் இருப்பதில்லை. சில விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள ஆமணக்கின் கிளைகளை வெட்டி பாதை ஓரங்களில் எறிவதுண்டு. அவ்வாறு எறியப்படும் கிளைகளில் உள்ள இலைகளை அப்பாதை வழியே செல்லும் அப்பகுதி வாழ் ஆடுகள் வயிறு நிறைய தின்றால், அவை இறந்துவிடும்.

இந்த நஞ்சை முறிக்க, மனிதனின் ரத்த ஜன்னி நோயை (Tetanus) குணப்படுத்த, குதிரையில் இருந்து ஊனீர் (Serum) தயார் செய்வது போல, ஆமணக்கு இலைகளை சிறிது அளவில், பல நாட்கள் ஆட்டுக்கு கொடுத்து, போதுமான அளவு நோய் எதிர்ப்பு புரதம் அதன் உடலில் உற்பத்தி ஆனா பின், அதன் ஊநீரை எடுத்து, பாதிக்கப்பட்ட ஆட்டுக்கு கொடுத்தால்தான், அதை காப்பாற்ற முடியும். இந்த மருந்தின் தேவை மிக குறைவு என்பதாலும், இதை தயாரிக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்பதாலும், இலாப நோக்கு கொண்ட எந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமும் நம் நாட்டில் இதை தயார் செய்ய முன்வராது. இந்த மருந்து இல்லாமல் ஆமணக்கு இலையை தின்னும் தஞ்சை மாவட்ட ஆடுகளை இன்றும் யாராலும் காப்பற்ற முடியாது.

ஆனாலும், இலையை உண்ட உடனேயே, வேறு சில மருத்துவ முறைகளை கடை பிடித்து, தீவிர சிகிச்சை அளித்தால், ஆட்டை காப்பற்ற முடியும். அனால், அதற்கு, அனுபவம் நிறைந்த கால்நடை மருத்துவரும், எல்லா வசதிகளும் கொண்ட கால்நடை மருத்துவ மனையும், மருத்துவரோடு முழு மனதோடு ஒத்துழைக்கும் ஆட்டு உரிமையாளரும் தேவை.

சென்னை பல்கலைகழகத்தில் கால்நடை மருத்துவ பட்டம் பெற்ற எனக்கு,

(1) ஏன் அன்று இந்த விபரங்கள் தெரியாமல் போயிற்று?
(2) ஏன் இன்றும் எல்லா கால்நடை மருத்துவமனைகளிலும், இதற்கு மருத்துவம் செய்ய முடியவில்லை?

இதற்கான விளக்கத்தை எனது அடுத்த இடுகைகளில் எழுதுகிறேன்.

Tuesday, May 26, 2009

திரும்பிபார்க்கிறேன்- 2





அழகு இருக்கும் இடத்திலே, ஆபத்து இருக்கும் மறைவுலே


ஆமணக்கு செடி பற்றியும், அதன் நச்சுத்தன்மை பற்றியும் தெளிவாக அறிந்தால்தான் ஆமணக்கு இலைகளை தின்ற தஞ்சை மாவட்ட ஆட்டுக்குட்டி மட்டும் ஏன் இறந்தது என்பது விளங்கும்.

பொதுவாக, கிராமங்களில் ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெய் எடுத்து (Castor Oil), அதை குழந்தைகளுக்கு மலமிளக்கியாக (laxative) கொடுப்பார்கள். பண்டைய காலத்தில் இந்த எண்ணெய் விளக்கு எரிக்க பயன்படுத்தப் பட்டதால், இதை விளக்கெண்ணை என்றே அழைப்பார்கள். ஆனால், இன்று பல தொழிற்சாலைகள் இதை மூல பொருளாக வைத்து பல வித தொழில்கள் இயங்க தேவையான பொருள்களை தயார் செய்கிறார்கள். ஆனால் எண்ணெய் எடுத்தபின் மிச்சமிருக்கும் கழிவு பொருளிலுள்ள நச்சு தன்மை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

[Photo]ஆமணக்கு செடி வெப்ப மற்றும் மித தட்ப வெப்ப பகுதிகளில் வளரும், பூக்கும் வகை சேர்ந்த தாவரமாகும். இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எத்தியோப்பியா (Ethiopia) பகுதி என்று சில குறிப்புகள் கூறினாலும், கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய கல்லறைகளில் ஆமணக்கு விதைகள் கண்டெடுக்க பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். கி மு 1552 ஆம் ஆண்டு எழுதப் பட்டதாக கருதப்படும் ஈபர்ஸ் பேபிரஸ் (Eber's Papyrus) என்ற மருத்துவ சுவடியில், ஆமணக்கின் மலமிளக்கும் மருத்துவ குணம் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது. உலக பேரழகி கிளியோபாட்ரா (Cleopatra) தன் கண் அழகை கூட்ட ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆமணக்கு செடி யாரும் பயிர் செய்யாமலே, பயனற்ற நில[Photo]ங்களிலும், தண்ணீர் தேங்காத ஆற்று படுகைகளிலும் அதிகம் காணப்படும் தாவரமாகும். இதன் பூக்கள் பற்பல வண்ணங்களில் உள்ளதால், கனடா போன்ற நாடுகளில், பூங்கா மற்றும் பங்களா போன்ற இடங்களில் அலங்கார செடிகளாக வளர்க்க படுகின்றன. ஆனால், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் இதை வர்த்தக நோக்கோடு பணப் பயிராக பயிர் செய்கிறார்கள். உலக நாடுகளில் ஆமணக்கு விதைகளை மிக அதிக அளவில், அதாவது ஆண்டுக்கு சுமார் 8,30,000 டன் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான்.



ஆமணக்கு செடியின் இலை, அதன் விதை மற்றும் எல்லா பாகங்களிலும் ரெசின் (Ricin) என் நச்சுப் புரத வகையை (Toxalbumin) சேர்ந்த மிக கொடிய நஞ்சு உள்ளது. இந்த நஞ்சு, எல்லா உயிரினங்களையும் கொல்லும் நஞ்சு[Photo]களின் வரிசையில் முதல் இரண்டு நஞ்சுகளில் ஒன்றாகும்.
இந்த நஞ்சு, நல்ல பாம்பின் நஞ்சைவிட இரு மடங்கும், சயனைடைவிட (Cyanide) 6000 மடங்கும் கொடியதாகும். ஒரு மனிதனை கொல்ல 0.035 கிராம் ரெசின் போதும். ஒரு ஆமணக்கு விதை ஒரு குழந்தையை கொல்ல போதுமானதாகும். ஆனால் அதிஷ்ட வசமாக இந்த நஞ்சு எண்ணையில் கரையும் தன்மை இல்லாததாலும், நம் கிராமங்களில் ஆமணக்கு எண்ணெய் அடுப்பில் காய்ச்சி தயாரிக்கப் படுவதாலும், விளக்கெண்ணையில் இந்த நஞ்சு இருப்பதில்லை.

தற்போது இந்த நஞ்சு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும், புற்று நோய் மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தவும் உபயோகப் படுகிறது. ஆனால், துரதிஷ்ட வசமாக, முதலாம் உலகப் போரில் உபயோகிக்க இந்த நஞ்சு நிரம்பிய ரசாயன குண்டுகளை தயார் செய்தார்கள். இதன் மிக கொடிய அழிவு திறனை எண்ணி, நல்ல காலமாக அவைகளை உபயோகப் படுத்தவில்லை.

பயங்கரவாதமும், குடை குண்டும்


ரெசின் என்ற இந்த நஞ்சை, ஆமணக்கு செடி மற்றும் விதையிலிருந்து பிரித்து எடுத்து பொடியாக்கி (powder) காற்றில் தூவியோ, குடி தண்ணிரில் கலந்தோ அல்லது ஊசி மூலமாகவோ செலுத்தியோ மனித உயிர்களையும் மற்ற உயிரினங்களையும் சுலபமாக அழிக்க முடியும். இந்த நஞ்சுக்கு, முறிவு மருந்து (antidote) ஏதும் இல்லாததால், இந்த நஞ்சால் பாதிக்கபடுகின்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மிகக் கடினம். இப்போது இந்த நஞ்சை, பல தீவிரவாத இயக்கங்கள், உயிரியல் தீவிரவாத (Bioterrorism) நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துகிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் ஜியார்ஜி மார்கோவ் என்பவரின் கொலை. அரசின் கொள்கைகளுக்கு மாற்று கருத்து கொண்ட பல்கேரிய நாட்டின் பத்திரிக்கையாளர் ஜியார்ஜி மார்கோவ் (Georgi Markov) என்பவர். அவர் அந்நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வாழ்ந்து வந்தார். ரெசின் நஞ்சை கண்ணுக்கு தெரியாத சிறு குண்டுகளாக செய்து, குடை முனையில் அவற்றை வைத்து, பேருந்துக்காக காத்து நின்ற மார்கோவை, தற்செயலாக குடையால் இடிப்பது போல், காலில் குத்தி கொலை செய்தார்கள். இது நடந்தது 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் நாள். இந்நிகழ்வு பற்றி மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைப்பகுதிகளுக்கு செல்லவும்.


இதே போல 1980 ஆம் ஆண்டு, ஈரான், ஈராக் சண்டையில் இதை பயன்படுத்தியதாகவும், ஆப்கானிஸ்தானில் அல் குவைதாவினர் இருந்த குகைகளில் இருந்து இந்த நஞ்சு கண்டெடுக்கப் பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனாலும், மற்ற தாவரங்களுக்கு இல்லாத ஒரு தனித்தன்மை ஆமணக்கு செடிக்கு இருப்பதால், இந்த நஞ்சை முறிக்கவோ, இந்த நஞ்சால் பாதிப்பு வராமல் காக்கவோ, அல்லது வாழ்வு முறை மாற்றம் மூலம், இயற்கையிலேயே, உடலில் எதிர்ப்பாற்றலை நம்மால் உண்டாக்கவோ முடியும்.

அது பற்றி அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.