Monday, September 21, 2009

திரும்பிப்பார்க்கிறேன் - 6

ஏழை விவசாயியின் தவிப்பையும், பணியாளரின் விருப்பையும் அறிந்த நான், தொலை தூரத்தில் உள்ள அக் கிராமத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அவ்விவசாயியிடம் விசாரித்தபோது, மாலையில் மேய சென்ற பசு வயல் வெளியிலேயே கன்று போட முடியாமல் தவித்து, படுத்து கிடப்பதாகவும், கன்றின் இரண்டு கால்கள் மட்டும் வெளியே வந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதான் அப்பசுவுக்கு தலை பிரசவம் (முதல் பிரசவம்) என்றும் கூறினார்.


மேற்கண்ட விவரங்களை கேட்டறிந்த நான், அந்த கடுங்குளிர் இரவில், எனது பணியாளருடன், பதற்றத்துடன் மகிழ்வுந்தில் (காரில்) பயணித்தேன். எனது பதற்றத்துக்கு முக்கிய காரணம், எனது பணியில் நான் பார்க்கபோகும் முதல் பிரசவ கேஸ் இதுதான் என்பதே.


அது மட்டுமின்றி, எனது கல்லூரி பயிற்சி காலத்தில், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில், பிரசவ வேதனையோடு மருத்துவ உதவி கேட்டு ஒரு பசு கூட கொண்டுவரப்படவில்லை.


சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நான் பயின்ற காலத்தில் நோயுற்ற குதிரைகளும், நாய்களுமே அதிகம் வரும். பார வண்டி இழுக்கும் ஒரு சில காளை மாடுகள் மட்டுமே கழுத்து புண், வயிறு உப்புசம் மற்றும் கொம்பு முறிவு போன்றவற்றுக்காக சிகிச்சைக்கு கொண்டு வரப்படும். பசுக்கள் மற்றும் எருமை மாடுகளின் வருகை மிகக் குறைவே. ஆகவே, அந்நாட்களில் பயின்ற கால்நடை மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்று, கால்நடை துறையில் பணியில் சேர்ந்த பிறகுதான் மாட்டின சிகிச்சையில் (Bovine practice) அனுபவம் பெற முடியும்.


சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், இப்போது இருப்பது போல, பெரிய பிராணிகள் மற்றும் சிறிய பிராணிகள் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஈனியல் பிரிவு என்று பல சிறப்பு மருத்துவ பிரிவுகள் கிடையாது. அதற்கு பதிலாக குதிரை பிரிவு, நாய்கள் பிரிவு, மாடுகள் பிரிவு என்று மூன்று பிரிவுகள் மட்டுமே இருந்தன.

தேவையான அறுவை மருத்துவம், பிரசவ இடர்பாடுகள் யாவும் ஒன்றாகவே, அந்தந்த பிராணிகள் பிரிவுகளிலேயே மருத்துவம் செய்யப்படும். இப்போது இருப்பது போல, பல பிரிவுகளிலும் சிறப்பு தேர்ச்சி (Specialist) பெற்ற மருத்துவர்கள் கிடையாது. அறுவை சிகிச்சை துறை தவிர, மற்ற அனைத்து சிகிச்சைகளையும் பொது மருத்துவர்களே செய்தனர்.


நான் படிக்கும்போது பாட திட்டங்களும் இன்றிருப்பது போல அறுவை மருத்துவமும் ஈனியல் மருத்துவமும் தனித்தனி பாடங்களாக இல்லை. அறுவை சிகிச்சையும், பிரசவ சிகிச்சை முறைகளும், அறுவை சிகிச்சை பிரிவிலேயே ஒன்றாக பாடம் நடத்தப்பட்டு, தேர்வும் நடத்தப்படும். அப்போது ஈனியல் மருத்துவத்தில் செய்முறை பயிற்சிகளைவிட (practical) ஏட்டு படிப்புக்கே (Theory) முக்கியத்துவம் இருந்தது.

1959-க்குப் பின் தான் அறுவை சிகிச்சை துறையும், ஈனியல் துறையும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பயிற்சியும், தேர்வும், தனித்தனியாக நடத்தப்பட்டன. ஈனியல் துறை என்ற தனி துறை இல்லாததால், பிரசவ கேஸ்களின் வருகையும் மிகக்குறைவே. மாணவர்களுக்கு பிரசவ இடர்பாடுகளை நீக்கும் மருத்துவ முறை பற்றி புத்தக அறிவு (Theoretical) உண்டே தவிர, செயல்முறை அனுபவ அறிவு அதிகமில்லை. இன்றிப்பது போல, கல்லூரியிலும் பிரசவ இடர்பாடுகளை நீக்கும் முறைகளை பயிற்றுவிக்கும் பாந்தம் (Phantom) பெட்டிகள் கிடையாது.

இந்த நினைவுகளோடு, அந்த குளிர் இரவில், எப்படி அந்த பசுவின் இடர் நீக்கி, மருத்துவம் செய்வது என்றெண்ணியே பதட்டத்துடன் பயணித்தேன்.

சுமார் 30 நிமிட பயணத்துக்குப்பின் வைத்தீஸ்வரன்கோவிலை அடைவதற்கு முன், இருண்ட வயல்வெளிக்கு அருகில் நாங்கள் சென்ற மகிழ்வுந்து நின்றது. அங்கு நின்றிருந்த ஒருவர் கையிலிருந்த லாந்தர் விளக்கை ஆட்டினார். அதோ அங்குதான் அந்த பசுமாடு படுத்திருக்கிறது என்றார் .


மகிழ்வுந்தில் இருந்துஇறங்கிய நானும், என்பணியாளரும், 3 - 4 வரப்புகளை தாண்டி, பசுவிடம் சென்றோம். அங்கு கையில் லாந்தர்விளக்குடன்மேலும் இரண்டு பேர் காவலுக்கு நின்றிந்தனர்.




1 comment:

  1. This post is in big letters.
    How to correct is easy.
    just go to the blogger dashboard
    and choose edit for this particular post.
    in the edit windows one toolbar button
    will be there like a rubber.
    When you hover your mouse on that
    it will show remove formatting from
    selection.

    press control A. it will select the whole post's text. then click that rubber icon.
    it will remove big letters.
    Then click publish post.

    It will be ok after that.

    ReplyDelete